‘நாடு வளர்ச்சியடைய வேண்டுமென்றால் வாரத்தில் தொண்ணூறு மணி நேரம் வேலை செய்ய வேண்டும். எனக்கு உங்களையெல்லாம் ஞாயிற்றுக் கிழமை வேலை பார்க்க வைக்க முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. நான் எல்லா ஞாயிற்றுக் கிழமையும் வேலை பார்க்கிறேன். வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது? எவ்வளவு நேரம் மனைவியையே பார்த்துக் கொண்டிருப்பீர்கள்? அதற்கு அலுவலகத்திற்கு வந்து வேலையைப் பார்க்கலாமே…’ என்று தனது ஊழியர்கள் மத்தியில் பேசியிருக்கிறார் எல் அண்டு டி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன்.
இதற்கு முன், கடந்த ஆண்டு இன்போஸிஸ் தலைவர் நாரயணமூர்த்தி, ‘நமது நாட்டின் உற்பத்தித் திறன் குறைவாக இருக்கிறது. உலக நாடுகளுடன் போட்டி போட வேண்டுமென்றால் நமது இளைஞர்கள், எழுபது மணி நேரம் வேலை செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டும்.’ என்று கருத்து தெரிவித்திருந்தார். ‘நாராயணமூர்த்தி சொல்வது மிகச் சரி. நான் தினமும் இருபது மணி நேரம் வேலை செய்கிறேன். வாரத்தின் ஏழு நாள்களும் வேலை செய்கிறேன். சனி, ஞாயிறு விடுமுறை என்பதெல்லாம் மேற்கத்திய கலாசாரம், இந்தியாவுக்கு அது தேவையே இல்லை.’ என உடனே ஆதரவுக்கு ஓடி வந்தார் ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பவிஷ் அகர்வால்.
இந்தியாவின் தொழிலாளர் சட்டங்கள் ஒரு வாரத்துக்கான வேலை நேரமாக வரையறை செய்திருப்பது நாற்பத்தெட்டு மணி நேரங்களைத்தான். ஆனால் அலுவலக நேரத்தை விட அதிக நேரம் வேலை செய்வது, அதற்கெனத் தனியாக ‘ஓவர்டைம் அலவன்ஸ்’ எதுவும் வழங்கப்படாமல் இருப்பது, விடுமுறை தினங்களிலும் அலுவலகத்துக்குப் போவது போன்றவை ஏற்கனவே இங்கு பல்வேறு துறைகளில் வழக்கத்தில் இருக்கும் நடைமுறைதான்.
Add Comment