101 ஏய்
தெருவுக்குத் தெரு விடுதலைப் புலிகள் ஆக்கிரமித்து இருந்த இந்திரா நகரில், வாட்டர் டேங்க் எதிரில் இருந்த பஸ் ஸ்டாப்பில் நின்று பேசிக்கொண்டிருந்த வசந்தகுமார் திடீரென்று , ‘ஏ என்னப்பா யாரோ ஒரு பொண்ணோட சுத்திக்கிட்டு இருக்கியாமே. காதலா’ என்றான் சிரித்தபடி.
‘ஆமாய்யா. ஃபிரெண்டுனு நான் என்னைப் பத்தின எல்லாத்தையும் ஒளிவு மறைவில்லாமல் எல்லார்கிட்டையும் சொல்றேன். ஆனா நீங்க யாராவது உங்க விஷயத்தைப் பத்தி ஒரு தடவையாவது வாயைத் திறந்திருக்கீங்களா.’
வசந்தகுமாரின் நிழலாகவே தொடர்ந்துகொண்டிருக்கும், ரவி சாஸ்திரி ஜாடையில் இருக்கும் பஷீர், ‘இருங்க இருங்க. இப்ப விகே பத்தி உங்களுக்கு என்ன தெரியணும். இவரும் லவ் மேரேஜ்தான்’ என்றான்.
‘அட. எங்க கிட்ட சுவாரசியமா சொல்ல என்னப்பா இருக்கு. உனக்கு சொல்ல விஷயமும் இருக்கு அதை சுவாரசியமா உனக்கு சொல்லவும் தெரியிது. நாங்க என்ன காதலிச்சோம். ஜாதி வேறனு ரெண்டு பக்கமும் ஒத்துக்கலை. வெட்டறத்துக்கு ஊரே தொரத்திக்கிட்டு வந்துது. ஊர்ல இருக்கமுடியாதுனு மெட்ராஸுக்கு ஓடி வந்துட்டோம். அவ வசதியான வீட்டுப் பொண்ணு. எல்லாத்தையும் விட்டுட்டு உடுத்திக்கிட்டு இருந்த துணியோட எங்கூட ஓடிவந்துருச்சி’ என்று சொல்லவும் பஸ் வர, ‘சரி அப்புறம் பாக்கலாம்’ என்று இருவரும் பஸ் ஏறிப் போய்விட்டார்கள்.
Add Comment