116 நேரம்
ஐஸ் ஹவ்ஸ் மசூதி சந்திப்பில் இருக்கும் டீக்கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் ரமேஷ் சொன்னான், ‘என் ஃபிரெண்டு சேகர் உன்னைப் பத்தி விசாரிச்சாண்டா’ என்று.
‘சேகரா. அது யாரு.’
‘அதாண்டா உங்க ஆபீஸ்ல பெரிய போஸ்ட்ல இருக்கான். ஒரு யூத் கேம்ப்ல மீட் பண்ணினேன்னு சொன்னேனே. நீ கூட, உங்க ஆபீஸ்காரங்க, அவனைப் பாக்கவிடலேனு சொன்னியே.’
அதை கரெக்டாக ஞாபகம் வைத்துக்கொண்டு குத்திவேறு காட்டுகிறான் பார். எல்லாம் லாயராகிவிட்ட ஏத்தம் வேறு என்ன என்று எண்ணிக்கொண்டபடி, அதைச் சாதாரணமாக்க, அலட்சியமாகக் கேட்டான்.
‘ப்ச். ஜேஎம்கே சேகரா. என் பேச்சு அவர் கிட்ட ஏன் வந்துது.’
என்ன இருந்தாலும் படிப்பாளி இல்லையா. இப்போது ஹைகோர்ட்டுக்கு வேறு போய்வந்து கொண்டிருக்கிறான். அவன் இவனுக்கு ஒரு படி மேலே போய், உன்னைப் பத்திப் பேசினதுக்காக உன்னை ரொம்பல்லாம் ஒஸ்தியா நெனச்சுக்காத,பேச்சுவாக்குல சாதாரணமா வந்ததுதான் என்பதைப்போலச் சொன்னான்.
Add Comment