57 வேட்டை
‘உங்கள ரெண்டு எம்.எல் தோழர்கள் தேடிக்கிட்டு இருக்காங்க’ என்று முன்னும் பின்னுமாக அவன் பெயரைச் சேர்த்துச் சொன்னான் தேவிபாரதி.
சிகரெட் பிடித்தபடி, ஆபீஸுக்குப் பக்கத்தில் இருந்த பொட்டிக்கடைக்கு அருகில், பொத்தல் குடைபோல் இலைகளைவிட மொட்டைக் கிளைகளே அதிகமாக இருந்த சிறிய மரத்தின் கீழ் ஒண்டிக்கொண்டு பேசிக்கொண்டிருந்ததே அவர்கள் இருவர்தான். அதில் அவன், தன் பெயரைச் சொல்லிச்சொல்லி பேசுவது இவனுக்கு வினோதமாக இருந்தது. ஏன் எதற்கு என்று விளக்கமுடியாத பழக்கங்கள் மனிதர்களிடம் படிந்துவிடுவது மாதிரி தேவிபாரதிக்கு இது இயல்பாகிவிட்டிருக்கவேண்டும்.
‘என்ன விஷயம். என்னை எதுக்குத் தேடணும்’ என்று இவன் கேட்டான்.
‘தெரியில’ என்று சொல்லிவிட்டு சிகரெட் முடிந்ததும் அவன் கிளம்பிப் போய்விட்டான்.
எம்.எல் என்று, ரகஸியக் குரலில் குறிப்பிடப்படுகின்ற, மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் என்கிற நக்ஸலைட்டுகள்தானே போலீஸால் தேடப்படுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் ஏன் தன்னைத் தேடவேண்டும்.
‘என்னவோ’ என்று, முடிந்த சிகரெட்டைப் போலவே அந்த எண்ணத்தையும் சுண்டி எறிந்துவிட்டு அலுவலகத்தில் வந்து அமர்ந்தான். டிஓஎஸ் இன்னும் மதிய நேர மேசை கவிழலில் இருந்து எழுந்திருக்கவில்லை.
எம்.எல் தோழர், என்று அவர்களை மிகுந்த மரியாதையுடன் குறிப்பிடுபவர்கள் பெரும்பாலும் (இந்தப் பெரும்பாலும் என்பதை சிறுபான்மையில் பெரும்பான்மை என்று எடுத்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் சிறுபத்திரிகை எழுத்தாளர்களைப் போலவே இந்த நக்ஸலைட்டுகளும் எந்த ஊரை எடுத்துக்கொண்டாலும் ஜனத்தொகையை ஒப்பிட்டால் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிற்கு அரியவகை மூலிகைகளைப்போல ஆகச் சொற்பமாகவே இருக்கிறவர்கள்தான்). அவனுக்குத் தெரிந்தவரை, தங்களைத் தாங்களே எம்.எல் என்று சொல்லிக்கொள்கிற தேவிபாரதியைப் போன்றவர்களாகவே இருந்தார்கள். நக்ஸலைட் என்று அவன் யாரையும் அதுவரை பார்த்திருக்கவில்லை. நக்ஸல்பாரி கொள்கை கொண்டவர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களாக அவனுக்குத் தெரியவந்திருந்த, ரங்கராஜன் என்கிற வீராச்சாமி, ஜேபி என்கிற பா. ஜெயப்பிரகாசம் போன்றவர்கள் பெரும்பாலும் வங்கிகளிலும் அரசு அலுவலகங்களிலும் அவனைப்போல வேலை செய்துகொண்டிருப்பவர்களாகவே இருந்தார்கள். தன்னை ஏசி பிரஸாத் டிரேட் யூனியனிஸ்ட் என்று சொன்னதைப் போல அவர்களும் நக்ஸலைட்டுகளாக இருக்கிறார்களோ என்னவோ.
Add Comment