47 அலைகள்
கடல்மட்டம்னு சொல்றோமில்லையா திருச்செந்தூர் கரையும் கடலும் அப்படி இருக்காது. வித்தியாசமா, மேடா இருக்கும். போய் பாருங்க என்று கி. ரா சொன்னது உள்ளே ஓடிக்கொண்டே இருந்தது.
என்ன சொல்கிறார் இவர். ஒரே கடல்தானே. அது எப்படி ஊர் ஊருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும் என்று அவன் உள்ளூர எண்ணியதைப் படித்தவர்போல,
நீங்க மெட்ராஸ்தான. பீச்சு பாத்திருக்கீங்கில்ல என்றார் ராஜநாராயணன்.
பொறந்ததே திருவல்லிக்கேணிலதான். பீச்சுக்கு எதுர இருக்கிற பிரெஸிடென்ஸி காலேஜுக்கு பின்னால, கோஷா ஆஸ்பித்திரிலதான் பொறந்தேன்.
பெறகென்ன. மெட்ராஸ்ல ரோட்டுக்கும் கடலுக்கும் மைல் கணக்கு தூரம் இருக்கும்ல. மெரினா பீச் ரோட்ல இருந்து பாத்தாலே கடல் தெரியும்ல.
ஆமா. கண்ணகி செலை கீழ நின்னு பாத்தாலே தெரியுமே.
திருச்செந்தூர்ல அப்படி இருக்காது. கிட்ட போனாதான் தெரியும்.
Add Comment