மொழிப் பிரச்னை
1953 அக்டோபர் முதல் தேதி ஆந்திர மாநிலத் துவக்க விழாவில் பிரதமர் நேரு கலந்துகொண்டு, புதிய மாநில மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். தெலுங்கு பேசும் மக்கள் போராடி, கலவரம் செய்து தங்களுக்கென்று ஒரு தனி மாநிலம் பெற்றுக் கொண்டதில் அவர்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அது தேசிய அளவில் ஒரு தவறான முன்னுதாரணமாகிப் போனது.
ஆம்! சில நாட்களுக்குப் பிறகு, நேரு பெல்காம் நகருக்கு விஜயம் செய்தார். அப்போது பெல்காம், மகாராஷ்டிர மாநில எல்லைக்கு உட்பட்டிருந்தது. பெல்காம் மக்கள் நேருவுக்கு கறுப்புக் கொடி காட்டினார்கள். அவர்க போராட்டத்துக்கு என்ன காரணம் தெரியுமா? கன்னடம் பேசும் மகாராஷ்டிரா மற்றும் ஹைதராபாதின் பகுதிகளை மைசூர் பிராந்தியத்துடன் சேர்த்து கன்னடம் பேசும் மக்களுக்கென்று ஓர் தனி மாநிலம் வேண்டும் என்பதுதான் அவர்கள் போராட்டக் கோரிக்கை.
டெல்லி திரும்பிய நேரு மனதில் உள்ளூர ஓர் எண்ணம் எழுந்தது. முதலில் தெலுங்கு, இப்போது கன்னடா. மக்களின் விருப்பத்துக்கு இணங்கவில்லை என்றால், அவர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்ள நேரிடும். எனவே, மக்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பதே விவேகமான செயல். அதன் காரணமாக, மொழிவாரி மாகாணம் குறித்து ஆலோசனைகள் சொல்ல இன்னொரு குழுவை அமைத்தார் நேரு. ஆனாலும், அது கொடுக்கும் அறிக்கை மீதான நடவடிக்கையைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று தனக்குத் தானே சமாதானமும் சொல்லிக் கொண்டார்.
Add Comment