81. கைக்குழந்தை ராஜிவ்
இந்திராவைப் பரிசோதித்த டாக்டர், அவர் கருவுற்றிருப்பதாகத் தெரிவித்தார். இந்தச் செய்தி இந்திராவை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும், குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு உடலில் தெம்பு இருக்குமா என்று அவர் பயந்தார். அவரை அக்கறையோடு யாராவது கவனித்துக் கொண்டால் தேவலை என்று நினைத்து ஃபெரோசும், இந்திராவும் பம்பாயில் அத்தை கிருஷ்ணாவின் வீட்டுக்குச் சென்றார்கள்.
பம்பாயின் பிரபல மகப்பேறு மருத்துவரான டாக்டர் டி வி ஷிரோத்கர் இந்திராவுக்கு மருத்துவம் பார்த்தார். கர்ப்பிணி மனைவியை ஆசையோடும், அக்கறையோடும் கவனித்துக் கொண்டார் ஃபெரோஸ். நல்ல உணவு, நிறைய ஓய்வு, கலகலப்பான பேச்சுத்துணை என்று ஃபெரோசும், இந்திராவும் நேரத்தைப் போக்கினார்கள். பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று கூட இருவரும் விவாதித்தார்கள். எப்படியும் தங்களுக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.
குழந்தை பிறந்ததும், ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவியாக அதனை வளர்த்து ஆளாக்கும் பொறுப்புதான் முக்கியம் என்ற எண்ணம் மீண்டும் இந்திராவின் மனதில் ஏற்பட்டது.
Add Comment