புதியதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலம் பாதுகாப்புக் குறைபாடுகளுடன் கட்டப்பட்டிருக்கிறது என்று ஆய்வு முடிவு வந்திருக்கிறது.
மடித்த வலது கையில் புத்தகமும், இடது கையின் ஆட்காட்டி விரல் நீண்டும் இருக்கும் அறிஞர் அண்ணா சிலை போன்று இந்திய வரைபடத்தின் வலது ஓரத்தில் அமர்ந்திருக்கிறது ராமேஸ்வரம் தீவு. இதனை நாட்டின் நிலப்பரப்புடன் இணைக்கும் வகையில் தரைப் போக்குவரத்திற்கு ஒன்றும், ரயில் போக்குவரத்திற்கு ஒன்றுமென. இரண்டு பாலங்கள் செயல்படுகின்றன.
இவற்றில் ரயில் பாலம் 1914ல் கட்டப்பட்டது. இந்தப் பாலம் கடல் அரிப்பால் பழுதடைந்திருந்தது. அதற்கு மாற்றாகச் சுமார் ஐந்நூறு கோடி மதிப்பீட்டில் புதிய தூக்குப் பாலம் கட்டப்பட்டு, ரயில் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. இதன் வழியாகக் கப்பல் கடந்து செல்ல இருபத்தேழு மீட்டர் உயரத்தில் எழுபத்தேழு மீட்டர் நீளத்தில் செங்குத்து தூக்குப்பாலமும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தூக்குப்பாலம் மின் இயந்திரவியல் சக்தி மூலம் திறந்து கப்பல்களுக்கு வழிவிடும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. (பழைய பாலம் திறக்கும்போது இருபுறமும் தலா ஐந்து தொழிலாளர்கள் மனித ஆற்றலைச் செலுத்தித் திறக்கும் பழைய முறையே பின்பற்றப்பட்டது). இந்தப் புதிய பாலம் செங்குத்தாகத் திறக்கப்படும் இந்தியாவின் முதல் பாலமாக அமைய உள்ளது. பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில் நடுவில் உள்ள லிப்டிங் கிர்டர் பதினேழு மீட்டர் உயரத்திற்கு மேலே செல்லும்.
இது அருகிலுள்ள சாலை பாலத்திற்கு இணையான உயரம். சுமார் அறுநூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இணைந்து பணியாற்றி உருவாகியுள்ளது. இந்த நவீனப் பாலத்திற்காகக் கடலில் முந்நூறு கான்க்ரீட் அடித்தளங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட தூண்கள் ஆகியவை அமைக்கப்பட்டன. எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு இரட்டை ரயில் பாதை அமைக்கும் வகையில் அடித்தளமும் தூண்களும் அகலமாக அமைக்கப்பட்டுள்ளன.
Add Comment