10. வரிப்புலி ஆவோம்
சம்பளம், கும்பளத்துடன் தொடர்புடைய முதன்மையான தலைப்புகளை நன்கு விரிவாகப் பார்த்துவிட்டோம். இப்போது, மீதமுள்ள சிறு தலைப்புகளைச் சில பழக்கங்களாகத் தொகுத்துப் பார்ப்போம்.
1. நம் மதிப்பை அறிந்திருத்தல்
நீங்கள் எந்த வேலை செய்தாலும் சரி, எங்கு வேலை செய்தாலும் சரி, உங்களுக்குக் கிடைக்கும் சம்பளமும் வசதிகளும் அந்த வேலைக்கு, அந்த அனுபவத்துக்கு, அந்த நாடு அல்லது நகரத்துக்கு ஏற்றதுதானா என்கிற தெளிவு உங்களுக்கு இருக்கவேண்டும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் வங்கித்துறையில் ஐந்தாண்டு அனுபவம் கொண்ட விற்பனை வல்லுனர் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் வசிக்கும் ஊரில் அதே அளவு அனுபவத்துடன் அதேமாதிரியான பணியைச் செய்கிறவர்களுக்குச் சராசரியாக என்ன சம்பளம் வருகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? ஒருவேளை தெரியாது என்றால், நீங்கள் பெறுவது சரியான சம்பளமா, குறைவா, அதிகமா என்று எப்படிப் புரிந்துகொள்வீர்கள்? ஒருவேளை, உங்கள் நிறுவனம் உங்கள் தலையில் நன்றாக மிளகாய் அரைத்துக்கொண்டிருக்கிறது என்றால், அதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?
ஆனால், யார் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதெல்லாம் அவரவருடைய தனிப்பட்ட விஷயம் இல்லையா? வெளியாட்களுக்குத் தெரியாத ரகசியம் இல்லையா? இதை நாம் எப்படித் தெரிந்துகொள்வது?
Add Comment