அவனைப் பார்ப்பது அது முதன்முறையல்ல. இந்த இரண்டு நாள்களில் அதிகம் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். புதிதாக வந்திருக்கிறான். வெள்ளைச்சட்டை, சாம்பல் நிறத்தில் பேண்ட் யூனிஃபார்ம். பழைய மகாபலிபுரச் சாலையிலிருக்கும் அந்தப் பணக்காரப் பள்ளியாக இருக்கலாம்.
சிரிக்கும்போது சட்டென விழுந்து நிறையும் அந்தக் கன்னக் குழிகள்தான் ஈர்த்தன முதலில். பிறகு பார்க்கும் போதெல்லாம் ரகசியக் குரலில் ஏதோ நகைச்சுவைகள் சொல்லி கூட இருப்பவர்களை சிரிக்க வைத்துக்கொண்டிருந்தான். நன்கு பரந்து விரிந்த செம்பட்டைக் கேசம், லேசாய்த் தாடைமுடிகள், இளஞ்சிவப்பு நிறம், எப்போதும் புன்னகை நிறைந்த அந்த முகம்.
காலை 6 மணிக்கு மேத்ஸ், 7 மணிக்கு பிசிக்ஸ் டியூஷன்கள் முடித்து 8 மணிக்கு பள்ளி போய், 4 மணிக்கு பள்ளியிலிருந்தே நேராக 5 -6 பயாலஜி டியூஷன் முடித்தால் 7 மணிக்கு இந்தக் கெமிஸ்ட்ரி க்ளாஸ். டாக்டராக்கிவிட்டுத்தான் தீர்வேன் என தீர்மானமெடுத்துக்கொண்டு தத்தமது ஐடி வேலைகளை விடிய விடிய பார்த்துக்கொண்டிருந்தார்கள் அம்மாவும் அப்பாவும். இந்த எம்.பி.பிஎஸ். ஏற்பாட்டு வலையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறேன் நான்.
நாளின் மொத்தச்சுமையும் ஏற்றிக்கொண்ட என் மூளை இங்கு வந்துதான் தூங்க ஆரம்பிக்கிறது. எத்தனை சமன்பாடுகள், எவ்வளவு தனிமங்கள், சேர்மங்கள், வாய்ப்பாடுகள் ஏற்கனவே நிரம்பி வழியும் மூளைக்குள் எதுவும் போவதே இல்லை.
Add Comment