மிகத் தீவிரமான விஷ்ணுபக்தனான இந்திரதுய்மன் என்ற அரசன் காட்டிற்கு வேட்டைக்குச் செல்கிறான். அங்கு வசிக்கும் பழங்குடியினரிடம் பேசும்பொழுது அவர்களது வழிபாட்டு முறைகள் குறித்து விசாரிக்கிறான். அவர்கள் தாங்கள் வழிபடும் தெய்வம் என்று கூறுவது நீல மாதவர் என்ற ஒரு தெய்வத்தை. அவர் யார் என்பது இன்னும் சுவாரசியமானது.
கிருஷ்ணாவதாரம் முடிந்து வைகுண்டம் செல்லும்போது ஸ்ரீகிருஷ்ணரின் உடல் இரண்டாகப் பிளந்து ஒரு பாகம் வனத்திலும் ஒரு பாகம் கடலிலும் விழுந்து விட்டதாம். வனத்தில் விழுந்த அந்தப் பாகத்தை அவர்கள் நீல மாதவர் என்று பெயரிட்டு வணங்கி வருவதாகத் தெரிவிக்கிறார்கள். கதையைக் கேட்டு மெய்சிலிர்த்த அரசன், “அந்த விக்கிரகத்தை என்னிடம் கொடுங்கள் நாடே மெச்சும் ஓர் ஆலயத்தைக் கட்டி அதில் இதைப் பிரதிஷ்டை செய்கிறேன். உங்களைக் காத்த கிருஷ்ணன் இனி உலகையும் காக்கட்டும்” என்று வேண்டுகிறான். தங்களுடைய வழிபாட்டுத் தலங்களில் யாரையும் அனுமதிக்கும் பழக்கம் அவர்களுக்குக் கிடையாது. இருந்தும் ஒரு அரசன் வேண்டிக் கேட்கும் வேளையில் அதை எப்படி மறுப்பது.? “முதலில் அதைப் பாருங்கள் அரசே. பின்னர் முடிவு செய்து கொள்ளலாம்” என்று கூறுகின்றனர். சரியென்று அனைவருமாக அதைப் பார்க்கச் செல்கின்றனர். அங்கு அந்த மேடையையும் காணவில்லை, விக்ரகத்தையும் காணவில்லை. மாயமாய் மறைந்திருந்தன.
இந்த இடத்தில் ‘காந்தாரா – எ ஃபிலிம் பை ரிஷப்ஷெட்டி’ என்று போட்டால் எப்படி இருக்கும்.? சரியாகப் பொருந்துமல்லவா..? காந்தாரா படத்தின் ஆரம்பக்காட்சி இப்படித்தான் இருக்கும். காந்தாரா, சந்திரமுகி பட இயக்குனர்கள் பல படங்களிலிருந்து ஈர்க்கப்பட்டு அதை எடுத்ததாகக் கூறலாம். ஆனால் அதன் கதைகள் அனைத்தும் பொருந்திப் போகும் ஓரிடம் பல நூறாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரிஸ்ஸாவில் உள்ள புரி ஜெகந்நாதர் ஆலயம்.
Add Comment