சென்ற வாரம் சட்டவிரோதமான முறைகளைப் பயன்படுத்தி பிரித்தானியாவை வந்தடையும் அகதிகளை ருவாண்டா நாட்டுக்கு அனுப்புவதற்கான திட்டம் பற்றிப் பார்த்தோம். இது முக்கியமாகச் சிறிய படகுகளில் பிரான்ஸிலிருந்து இங்கிலாந்து நோக்கி மிகவும் ஆபத்தான பயணம் மேற்கொள்வதைத் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.
சிறு படகுகள் மூலம் இங்கிலாந்தை வந்தடைபவர்களின் எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டில் இருநூற்றுத் தொண்ணூற்றொன்பதாக இருந்து 2022-ஆம் ஆண்டில் நாற்பத்தையாயிரத்து எழுநூற்றைம்பத்தைந்து ஆகக் கூடியுள்ளதாக அரசாங்கப் புள்ளிவிவரம் சொல்கிறது. ஆரம்பத்தில் மிகக் குறைந்தளவில் இருந்த அல்பேனிய நாட்டவரின் எண்ணிக்கை 2021-இல் எண்ணூற்றுப் பதினைந்தாகவும் 2022-இல் பன்னீராயிரத்திற்கும் மேலாகி அவ்வாண்டில் திடீரென முதலாம் இடத்தை அடைந்து சாதனை படைத்தது. அதுவரை ஈரான், ஈராக், சிரியா போன்ற நாட்டவர்களின் எண்ணிக்கையே முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 2022-இல் அல்பேனியர்களுக்கு அடுத்ததாக ஆப்கானிஸ்தானியர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்து அறுநூறுகளில் இரண்டாம் இடத்தினைப் பிடித்தது.
ஆப்கானிஸ்தான் போன்ற உள்நாட்டுப் பிரச்சினைகள் உள்ள நாட்டினரின் என்ணிக்கையோடு ஒப்பிடும்போது அல்பேனியாவிலிருந்து அதிகம் பேர் தஞ்சம் கோரி இங்கிலாந்தை நோக்கி வருவது அரசியல் அவதானிகளை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. கம்யூனிச நாடாக இருந்து தற்போது ஜனநாயக அரசியல் முறையைக் கொண்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அல்பேனியா நேட்டோ அமைப்பிலும் அங்கத்துவம் வகிக்கிறது. அல்பேனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்காக விண்ணப்பித்துமுள்ளது. ஆப்கானிஸ்தான், சிரியா நாடுகள் போலல்லாது உள்நாட்டு யுத்தங்கள் எதுவுமில்லாத நாடாகையால் அரசியல், இன, மத ரீதியான அடக்குமுறைகள் பொதுவாக இல்லை. பிரித்தானிய அரசாங்கம் இந்நாட்டை ஒரு பாதுகாப்பான நாடாகவே கருதுகிறது. அதனால் இங்கிருந்து இங்கிலாந்தை நோக்கிப் படகுகளில் பயணம் செய்யும் அல்பேனியர்களை பொருளாதாரக் காரணங்களுக்காக வருபவர்கள் என்பதே பொதுவான கருத்து. அண்மையில் அவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததற்கான முக்கியக் காரணம் கிரிமினல் கூட்டங்கள் பொருளாதார முன்னேற்றத்தில் ஆர்வமுள்ள அல்பேனியர்களுக்கு ஆசை காட்டிக் கூட்டி வருவதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பொதுவாக இங்கிலாந்தை நோக்கி வரும் அகதிகள் உலகில் இத்தனை நாடுகள் இருக்கும் போது அவற்றைக் கடந்து எதற்காக இங்கிலாந்தை நோக்கி வருகிறார்கள்? ரெட் க்ராஸ் நிறுவனத்தின் ஆய்வுப்படி இங்கிலாந்தை நோக்கிப் பொதுவாக அகதிகள் வருவதற்கான காரணங்கள் பலவுண்டு.
ஏற்கனவே உறவினர் அல்லது நண்பர்கள் இங்கிலாந்தில் வாழ்வது ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. தங்கள் சொத்துப் பத்துகளை விட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போவோர் தங்களுக்குத் தெரிந்தவர்கள் இருக்கும் நாட்டிற்குப் போனால் அவர்களின் ஆதரவுடன் அந்நாட்டில் காலை ஊன்றலாம் எனும் நம்பிக்கையுடன் அந்நாட்டை நாடிப் போவதில் ஆச்சரியமில்லை. அடுத்த முக்கியக் காரணம் மொழி. உலகில் பல நாடுகளிலும் ஆங்கிலம் ஒரு மொழியாகக் கல்வித் திட்டங்களில் உள்ளன. அதற்கு ஆங்கிலேயர்களின் காலனித்துவமும் ஒரு காரணம். அதனால் ஆங்கில மொழிப் புலமை ஓரளவேனும் இருப்பவர்கள் மொழி தெரியாத பிற நாடுகளுக்குச் செல்வதை விட இங்கிலாந்திற்குப் போனால் தங்களால் இலகுவாகச் சமாளிக்க முடியும் என்பதுவும் ஒரு காரணம். இவற்றை விடக் கடத்தல்காரர்கள் சொல்லும் நாட்டுக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லாமல் வந்து சேர்வோரும் உண்டு.
எது எப்படியோ, கடந்த சில வருடங்களாக அதிகரித்து வரும் சிறு படகுகளின் எண்ணிக்கை பிரித்தானிய அரசிற்குத் தலையிடியாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை. இதனைத் தடுப்பதற்காக ருவாண்டா நாட்டுக்கு அனுப்பும் திட்டம் போன்றவை மட்டுமல்லாமல் வேறு பல நடவடிக்கைகளையும் பிரித்தானிய அரசு மேற்கொள்கிறது. அவற்றில் முக்கியமாக அல்பேனிய அரசுடனும் பிரான்ஸ் அரசுடனும் பிரித்தானிய அரசு மேற்கொண்ட ஒப்பந்தங்களைச் சொல்லலாம்.
பிரான்ஸ் நாட்டுடனான ஒப்பந்தத்தின் மூலம் பிரான்ஸ் நாட்டின் கடலோரக் காவல் அதிகாரிகளின் எண்ணிக்கை அடுத்த சில வருடங்களுக்கு அதிகரிக்கப்படவுள்ளது. இதன் மூலம் படகுகள் பிரான்ஸின் எல்லைக்குள்ளேயே தடுத்து நிறுத்தப்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இதற்கான் செலவிற்காக அடுத்த சில ஆண்டுகளில் ஐந்நூறு மில்லியன் பவுண்ட்ஸ்கள் வரை பிரித்தானிய அரசு ஒதுக்கீடு செய்யவுள்ளது.
சட்ட விரோதமாக இங்கிலாந்துக் கடற்கரைகளில் வந்து சேரும் அல்பேனியர்களைத் திருப்பி அவர்களது நாட்டிற்கு அனுப்புவதற்கான ஒரு கூட்டறிக்கையை அல்பேனிய அரசுடன் பிரித்தானிய அரசு டிசம்பர் 2020-இல் வெளியிட்டது.
அகதிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் கடும் போக்கைத் தற்போது பிரித்தானிய அரசு கடைப்பிடித்தாலும் சட்டபூர்வமாகத் தஞ்சம் கோருவோருக்கான பொறிமுறைகளும் உண்டு. இப் பொறிமுறைகள பிரத்தியேகக் குழுக்களுக்காக உருவாக்கப் பட்டதால் எல்லோருக்கும் பொருந்தாது என்பது குறிப்பிடத் தக்கது.
ஏற்கனவே பிரித்தானியாவில் உள்ளவர்களின் நேரடி உறவுள்ள குடும்பத்தினர் சட்டபூர்வமாக விசா எடுத்து வந்து குடும்பத்துடன் சேரலாம். UNHCR மீள்குடியேற்றத்திற்கான முறைகள் மூலம் வந்து சேரலாம். இவற்றைவிட உக்ரைன் நாட்டுப் பிரஜைகள் தற்போதைய சூழல் காரணமாக இங்கிலாந்திற்கான முறைகளும் உண்டு. அத்துடன் ஆப்கானிஸ்தானில் பிரித்தானியப் படைகளோடு தொடர்புள்ளவர்கள் போன்றோரையும் விசேட திட்டங்களின் கீழ் வருவதற்கான அனுமதிகளை வழங்கியது. பிரித்தானியாவின் முன்னாள் காலனியாக இருந்த ஹாங்காங் நாட்டுப் பிரஜைகளில் பலர் பிரித்தானியாவிற்கு வருவதற்கான முறைகளும் உண்டு.
உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்கும் வசதி கொடுக்கக் கூடிய குடும்பங்கள் ஸ்பான்சர் பண்ணுவதன் மூலம் பல உக்ரைன் குடும்பங்கள் பிரித்தானியாவில் வந்து சேர்ந்துள்ளனர். இது தற்காலிகமாக அவர்களது நாட்டு நிலைமை கருதிக் கொடுக்கப்படும் சலுகை இது. பிரித்தானியா மட்டுமல்ல அனைத்து ஐரோப்பிய நாடுகளும் உக்ரைன் அகதிகளை மீள் குடியேற்றம் செய்கின்றன.
அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பிரித்தானிய அரசிற்கு மட்டுமல்லாது அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் அரசியல் பிரச்சினைகள் உண்டு. சென்ற வாரம் நெதர்லாந்து நாட்டின் கூட்டாட்சி அரசாங்கம் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே வந்த கருத்து வேற்றுமையால் கலையும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
பிரித்தானியா நாற்புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவாக இருப்பதால் சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து வருவோரின் எண்ணிக்கை மற்றைய ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடும் போது குறைவானதே. அத்துடன் பொதுவாக அகதியாகத் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கையும் பிரித்தானியாவை விட பிரான்ஸ், ஜேர்மனி போன்ற மற்றைய ஐரோப்பிய நாடுகளில் அதிகம்.
கொரோனாத் தொற்று மற்றும் ரஷ்யா – உக்ரைன் போரினால் உலகின் அனைத்து நாடுகளும் தற்போது பொருளாதாரச் சிக்கல்களை எதிர் நோக்குகின்றன. இப்படியான நேரங்களில் வெளியிலிருந்து தஞ்சம் கோரி வருவோரை வரவேற்கும் நிலையில் முன்பு போலல்லாது அனைத்து நாடுகளும் சற்றுக் கடுமையான போக்கையே கடைப்பிடிப்பார்கள் என்பதில் ஆச்சரியமேதுமில்லை. அண்மைக் காலங்களில் மேற்குலக நாடுகளில் குடிவரவுக்கு எதிரான வலது சாரிக் கட்சிகளின் பிரபலம் அதிகரித்து வருவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
ந. ஜெயரூபலிங்கம்
njey1710@gmail.com
Add Comment