4. தோன்றாத் துணை
நீ என்னைத் தொட்டாயா என்று கேட்டேன். அவள் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் காத்திருந்துவிட்டு மீண்டும் கேட்டேன்.
‘இல்லை சகோதரனே’ என்று கன்னுலா சொன்னாள்.
‘அப்படியா? என் உச்சந்தலையில் ஓர் உள்ளங்கை படிந்து மீண்டது. கணப் பொழுதுதான் இருக்கும். ஆனால் கரம் பட்டதை உணர்ந்தேன். பிரமையல்ல.’
நிச்சயமாகத் தானில்லை என்று அவள் சொன்னாள். மூத்தவனின் சிரத்தில் கரம் பதித்து ஆசி வழங்க எப்படி எனக்குத் தோன்றும் என்று சிரித்தாள்.
‘ஆனால் நீ தெய்வமானவள்.’
இதற்கும் அவள் பதில் தரவில்லை. இருந்த காலத்தில் அவள் இப்படி இல்லை. உடனிருக்கும் நேரமெல்லாம் ஓயாமல் எதையாவது பேசிக்கொண்டே இருப்பாள். ஒரு வினாவுக்கு நூறு சொற்களுக்குக் குறையாமல் பதில் தருவாள். பேச்சுக்குச் சளைக்காதவளாக இருந்துவிட்டு எப்படித்தான் இப்போது அளந்து அளந்து சொற்களைத் தூவ முடிகிறதோ தெரியவில்லை.
‘கன்னுலா, நான் உணர்ச்சிவயப்பட்டிருப்பது உண்மை. எதிர்பாராத நேரத்தில் நீ வந்திருக்கும் மகிழ்ச்சியின் விளைவு அது. ஆனால் தொடு உணர்ச்சியைக்கூட அறிய முடியாத அளவுக்குப் பரவச நிலையை அடையவில்லை. அதனால்தான் கேட்கிறேன். நீ தொடவில்லையா?’
‘நிச்சயமாக இல்லை. என்னால் தொட இயலாது அண்ணா. தோன்றவும் இயலாது. நான் உறுப்புகளற்றவள். உடலற்றவள். உனக்காக மட்டும் வெறும் தொனியாக மீதமிருக்கிறேன்’ என்று சொன்னாள்.
‘தொனிதான் தேவியின் சொரூபமா?’
அவள் மீண்டும் மௌனமானாள். சில வினாடிகளுக்குப் பிறகு, ‘ஓசையற்ற சர்சுதியை உன்னால் கற்பனை செய்ய இயலுமா? சட்டென்று இந்த நதி சத்தமற்றுப் போனால் உனக்கு என்ன தோன்றும்?’ என்று கேட்டாள்.
பிரமித்துப் போகிறேன்.