25. சாபம்
நான் குத்சன். எது ஒன்றையும் நானாவிதமாக எண்ணிப் பார்த்து முடிவு செய்யாமல் ஒரு சொல்லைக்கூட வீணடிக்கும் வழக்கம் எனக்கில்லை. சொல் அளவில் அத்தனை கவனம் காப்பவன் செயலளவில் எப்படி இருப்பேன்?
அந்தக் கிராத குலத்து சாரசஞ்சாரன் என்னிடம் சொன்னான்,
‘முனியே நீ சக்தி படைத்தவன். அதை உணர்கிறேன். முனியே உன் ஆற்றல் அளவு கடந்தது. அதை நான் தரிசித்துவிட்டேன். முனியே நீ சொல். இந்த அனுபவத்தைப் பெற எனக்கென்ன தகுதி உள்ளது? நான் அற்பன். தோன்றிச் செழித்து உதிரும் ஓராயிரம் இலைச் சருகுகளுள் ஒன்றென என் வாழ்க்கை ஏதோ ஒரு விதமாகச் சென்றுகொண்டிருக்கிறது. வெறும் பணியாக நான் நினைத்துப் புறப்பட்ட ஒன்றனை ஒரு யுகப் புரட்சியாக நீ கருதுவது எனக்குப் புரிகிறது. ஆனால் இப்போதும் சொல்கிறேன். நீ உணரும் விதத்தில் என்னால் அதனை உள்வாங்க இயலவில்லை.’
நான் சிரித்தேன். ஓர் எளிய மனிதன் பாவனைகள் களைந்து தன் உள்ளத்தைத் திறந்து காட்டும்போது கண்டு ரசிக்கவும் அறிந்து பயிலவும் அதில் ஏராளமுண்டு. அதர்வனிடம் நான் திறந்து காட்டாததா? அவனும் கண்டு ரசித்தான். நிச்சயமாக உணரவும் செய்திருப்பான் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவன் எனக்கு நியாயம் செய்யவில்லை. அவன் செய்த பிழையை நான் இவனுக்குச் செய்யக்கூடாது என்று முடிவு செய்துகொண்டு சொன்னேன்,
‘சாரனே, நீ என்னை வியக்கிறாய். என் செயலைக் கண்டு திகைக்கிறாய். நீ கண்ட அற்புதக் காட்சி என்னால் படைக்கப்பட்டது என்பதை எண்ணி எண்ணிப் பார்த்துச் சிலிர்த்துப் போகிறாய். இன்னொருவன் இப்படிச் செய்ய முடியுமா, செய்யக் கூடுமா என்று அரற்றுகிறாய். ஆனால் இதை உனக்கு நான் ஏன் காட்டினேன் என்று புரிந்துகொள். நான் நிகழ்த்தியது அற்புதமென்றால் இதைப் போன்ற கோடி சாகசங்களை அதர்வன் செய்வான். இதனினும் மேலான அற்புதங்கள். இதனினும் அர்த்தம் பொதிந்த சூக்குமங்கள். உன் திகைப்பில் சிறிது மீதம் வைத்துக்கொள். அவன்முன் நீ ஒரு கல்லாகவே சமைந்து போனாலும் நான் வியக்கமாட்டேன்.’
Add Comment