26. எண்மர்
கிராத குலத்து சார சஞ்சாரன் பைசாச மேருவுக்குச் சென்றதன் காரணத்தால் அவன் சூத்திர முனி குத்சனைச் சந்திக்க நேர்ந்து, அவனைக் குறித்து அறிந்து கொண்டான். இருபத்து மூன்று சம்வத்சரங்களாக அச்சாரனின் வரவின் பொருட்டுக் காத்திருந்த சூத்திர முனி குத்சன் தனது சரிதத்தை அவன் சிந்தைக்குள் செலுத்தி வைக்க எண்ணியதன் விளைவாகச் சாரனுக்கு அதர்வன் தெரியத் தலைப்பட்டான். நாமமும் சரிதமும் அற்றதொரு முடிவற்ற பேரிருப்பின் கருப்பொருளானவனாகிய அதர்வன் அச்சூத்திர முனியினால் சபிக்கப்பட்டதனாலேயே ரிதம் புரண்ட தருணத்தின் காரணனாகிவிட்டபடியால் தன் நாமமும் சரிதமும் தெரியும்படியாகச் செய்யவேண்டிய நிலைக்குச் செலுத்தப்பட்டு, அதன் விளைவாகவே சூத்திர முனியின் சிந்தையில் தன் தரப்பைப் பதியனிடத் தீர்மானம் செய்தான். சூத்திர முனி குத்சன் தன் சாபத்தின் கருவியை இறுதியாகக் கண்டடைந்து விட்டானென்பதை அதர்வன் தன் தியானத்தில் கண்டுணர்ந்த கணத்திலேயே அதனையொரு சூக்குமக் குறிப்பாகத் தனதிரு அரணிக் கட்டைகளுக்குள் பொதிந்து உரசி, அக்னியின் வழியாக விண்ணிலேற்றி சாசுவதத்தில் சேர்த்து வருணனுக்குத் தகவல் தெரிவித்து எனக்கு அறிவிக்கச் சொன்னான். காலமற்ற காலத்தில் வருணன் ஒற்றைத் துளி ப்ரவர்ஷமாக என் சிரத்தின் மையத்தில் இறங்கிச் சிந்தையில் சேர்ந்து அதனை நிரம்பச் செய்துவிட்டுக் கிளம்பிச் சென்ற பின்பு நான் விரித்துப் பார்த்துக் கண்டுணர்ந்ததெல்லாம் ஹிரண்யகர்ப்பன் சாம்பர் பூசிப் படர்ந்து நிறையவிருந்த காலப்பெருஞ் சர்ப்பத்தின் கோரப்பிடியினுள் என் சுட்டுவிரலின் நுனி அகப்பட்டிருந்ததைத்தான்.
நான் அங்கீரஸ். ஒற்றை உருத் தோற்றத்தில் என்னால் அறிமுகம் செய்துகொள்ள இயலாததன் பின்னணியைத் தெரிவித்துவிட்டு இச்சரிதத்தின் கண்ணிகளுள் ஒன்றாக என்னை இணைத்துக்கொள்வதே சரியாக இருக்குமென்று தோன்றுவதன் காரணத்தை முதலில் தெரியப்படுத்திவிடுகிறேன்.
நானற்றிருந்த என்னை அதை உணரச் செய்து என் நானினின்று எழுவரைப் பிறப்பித்த காரணத்தின் பொருத்தப்பாட்டை பிரம்மத்தின் சாரத்தினின்று உறிஞ்சிப் பெற தேவர்களாலும் கூடவில்லை என்பதைச் சொன்னால் நான் ஒருவனில்லை என்பதை ஒருக்கால் நீங்கள் உணரக்கூடும்.
Add Comment