28. பேசும் குருவி
பல நாள்களாக நடந்துகொண்டிருந்தோம். கணக்கு வைத்துக்கொள்ளாமல் நெடுந்தொலைவைக் கடந்திருந்தோம். ஆனால் கவனப் பிசகாகக் கூட சர்சுதியின் கரையைவிட்டு விலகிச் செல்லவேயில்லை. ஆதிசிவக் குன்றிலிருந்து புறப்பட்டுத் தனியாக வந்தபோதுகூட சிறிது தடம் நகர்ந்து மீண்டும் வந்து சேர்ந்துகொள்வேன். வழியில் தென்படும் கிராமங்களுக்குள் சென்று பார்ப்பது, எதிர்ப்படும் வேடர் குடியிருப்புகளுக்குச் சென்று ஏதோ ஒரு விதமாக அறிமுகம் செய்துகொண்டு சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு வருவது என்றிருந்திருக்கிறேன். நடமாட இயலாத அளவுக்கு அடர்த்தி மிகுந்த கானகங்களைக் கடக்க வேண்டியிருந்தபோதோ, நதியின் தடம் மனிதப் பார்வையிலிருந்து தப்பித்துப் பெரும்பேருயரங்களில் இருந்து வீழ்ந்து திசைமாறும்போதோ, வழியே இன்றிச் சுற்றிக்கொண்டுதான் மீண்டும் அதன் வாலைப் பிடிப்பேன். ஆனால் அந்தச் சூத்திர முனியுடன் புறப்பட்ட பிறகு அதற்கெல்லாம் அவசியமே இல்லாமலாகிவிட்டது.
அவனுக்கு நதியின் மொத்த நீளமும் தெரிந்திருக்குமோ என்று ஐயுறும் அளவுக்குத் தடம் பழகியிருந்தது. நிலப்பரப்பின் தன்மை தெரிந்திருந்தது. எங்கே மழை பெய்யும், எங்கே குளிரும், எங்கே வெயில் நிறைக்கும் என்றெல்லாம் தெரிந்திருந்தது. ஒரு சம்பவத்தை மறக்கவே முடியாது.
நதியோரமாக நடந்து சென்றுகொண்டே இருந்தோம். சட்டென்று ஓரிடத்தில் நின்று, என்னையும் நிற்கச் சொன்னான். நாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்து கண்ணெட்டும் தொலைவில் ஒரு சிறிய குன்று தென்பட்டது. அதனை அடுத்து ஒரு கானகம் விரிந்திருந்ததையும், சர்சுதி அதனூடாகச் சென்றதையும் கண்டேன்.
‘என்ன தெரிகிறது உனக்கு?’ என்று முனி கேட்டான்.
Add Comment