33. ஒன்று
மர உடும்பு பிடிப்பதற்காகக் கானகத்தின் மையப் பகுதிக்குச் சென்றிருந்தேன். நெடுநேரம் சுற்றித் திரிந்த பின்னர் ஒரு பிலக்ஷண மரத்தின் மீதிருந்த துவாரத்துக்குள்ளிருந்து ஒன்று தலையை நீட்டியதைக் கண்டேன். மர உடும்பு பொதுவாகப் பகல் பொழுதில் பொந்தினுள் இருக்க விரும்பாது. மீறி இருக்கிறதென்றால் அது முட்டையிட்டிருக்கிறதென்று பொருள். எங்காவது முட்டையிட்டு அவற்றை எடுத்து வந்து ஏதேனுமொரு பொந்தில் போட்டுவிட்டுப் போய்விடும். பெரும்பாலும் அங்கே மீண்டும் திரும்பி வராது. என் தகப்பன் உடும்பு பிடிக்கச் சென்ற பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முட்டைகளை மட்டும் எடுத்து வருவான். ‘நீ உயிருடன் ஓர் உடும்பைப் பிடித்து வந்து எத்தனை காலமாகிவிட்டது’ என்று என் தாய் ஒவ்வொரு முறையும் சொல்வதைக் கேட்டுச் சிரிப்பேன்.
என் தகப்பன் எனக்குச் சிறிய மிருகங்களை வேட்டையாடக் கற்றுத் தந்த பிறகு, என்றைக்கெல்லாம் நான் உடும்பைக் குறி வைத்தேனோ, அன்றெல்லாம் எப்படியாவது அது எனக்கு அகப்பட்டுவிடும். பெற்றவளுக்கு அது சொல்ல முடியாத மகிழ்ச்சியை அளிக்கும். அவள் என்னைப் பாராட்டும் தோரணையில் என் தகப்பனைச் சீண்டிப் பேசுவதை அவன் ரசிப்பான். ‘இதெல்லாம் உனக்காக நான் மீதம் வைத்த உடும்புகளென்று உன் தாய்க்கு எப்படித் தெரியும்?’ என்று அவன் என்னிடம் சொல்வான். அதை நான் ரசிப்பேன்.
அன்றைக்கு அந்த உடும்போடு அதன் முட்டைகளையும் மொத்தமாக எடுத்துச் சென்றுவிட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு சத்தமில்லாமல் அம்மரத்தின்மீது ஏறி, பொந்துக்குப் பின்புறம் மறைந்துகொண்டேன்.
Add Comment