36. சல புத்ரன்
அன்றைய நாளை என்னால் மறக்க முடியாது. விடிந்ததிலிருந்தே எல்லாம் வினோதமாக இருந்தது. வனத்தில் எங்கள் குடிசை இருந்த எல்லைப் பகுதியில்தான் ஏராளமான பட்சிகளும் வசித்துக்கொண்டிருந்தன. ஒவ்வொரு நாளும் புலரும் நேரத்தில் ஆயிரமாயிரம் பட்சிகள் கூக்குரலிட்டுக்கொண்டு நாலாபுறமும் பறந்து வான் நிறைக்கும் காட்சியை என்றுமே நான் காணாதிருந்ததில்லை. குருகுலத்துக்கு உள்ளே இருக்கும் மரங்களில் நிறைய கிளிகள் வசித்துக்கொண்டிருந்தன. அவையும் அந்த நேரத்தில் மொத்தமாகக் குரலெழுப்பியபடியே நதிதீரம் வரை பறந்துவிட்டு மீண்டு வந்து சேரும். பட்சிகளின் சுருதி இல்லாத ஒரு நாள் அங்கு விடிந்ததேயில்லை. ஏனோ அன்று அது அறவே இல்லை.
மாறாக, கோசாலையில் இருந்த பசுக்கள் வழக்கமில்லா வழக்கமாகக் கத்திக் கூப்பாடு போட்டுக்கொண்டே இருந்தன. நானும் என் பதியும் அவசரமாகப் புல் கட்டுகளை எடுத்துக்கொண்டு கோசாலைக்குச் சென்று பிரித்துப் போட்டு உண்ணக் கொடுத்தும் அவை முகர்ந்துகூடப் பார்க்கவில்லை. கூப்பாட்டை நிறுத்தவுமில்லை.
அன்றைக்கு நெடுநேரமாகியும் சூரிய உதயமாகவில்லை. குத்சனின் தகப்பன், கண்ணை இடுக்கி அண்ணாந்து பார்த்தான். மேகங்கள் இல்லை. மழைக்கான சாத்தியக்கூறுகள் ஏதும் தென்படவில்லை. ஆனாலும் வானம் அடர்ந்த கருஞ்சாம்பல் வண்ணத்திலிருந்தது. காற்றில் எப்போதும் இருக்கும் குளிர்ச்சி அறவே வற்றி, வெக்கையை உணர முடிந்தது. அது எனக்கு மிகவும் அதிசயமாக இருந்தது.
ரிஷியின் குருகுல வளாகத்தில் பணியேற்று நாங்கள் வசிக்க வந்த காலம் தொடங்கி என்றுமே வெக்கையைக் கண்டதில்லை. எப்போதும் குளிரும். எப்போதாவது குளிராமல் இருக்கும். நல்ல வெயில் பொழுதுகளிலும் வீசும் காற்று குளிர்ந்தே இருக்கும். அன்று என்ன மாயம் நடக்கிறதென்றே புரியவில்லை. நெடுங்காலத்துக்குப் பிறகு உழைக்காதிருந்தபோதே உடலில் வியர்வை சுரந்ததை உணர்ந்தேன்.
Add Comment