40. தேடித் திரிந்தவை
வனங்களின் தாயை அன்றி இன்னொன்றினைத் தொழாத மாமன்னன் சம்பரனின் வம்சத்தில் தோன்ற விதிக்கப்பட்ட சிலவன் நான். இறந்து எழுபது சம்வத்சரங்கள் பூர்த்தியாகிவிட்டன. ஆயிரமாயிரம் ஆரிய வீரர்களுக்கும் பராக்கிரமசாலிகளான அவர்களது பேரரசர்களுக்கும் அவர்களை வழிநடத்திய பரத்வாஜன், விசுவாமித்திரன், வசிட்டன் முதலான மதியூகி ரிஷிகளுக்கும் பன்னெடுங்காலம் சிம்ம சொப்பனமாக விளங்கிய எங்கள் குல மூப்பனைப் போலவே யுத்த களத்தில் என் பிராணன் பிரிந்தது.
பிறகு விதிக்கப்பட்ட பைசாச வாழ்வில் என் குடியினைச் சேர்ந்த முந்நூறு பைசாசங்களுடன் அலைந்து திரிந்துகொண்டிருந்தபோது கன்னுலா தெய்வத்தின் பார்வை எம்மீது பட்டது. இது வெறும் அருளால் ஆனதல்ல. எதிர்பாராது கிடைத்த ஓர் உண்மையின் தரிசனம். பைசாசங்களுக்கும் என்றோ ஒருநாள் தெய்வம் தோன்றி நற்சொல் வழங்குமென்றால் நலிந்த எம் குடியும் ஒரு நாள் மீண்டும் செழித்து எழும். படை பலத்தினால் அல்லாமல் ரிஷிகளின் மந்திர தந்திரங்களினாலும் சூழ்ச்சியினாலும் எங்கள் பேரரசை அபகரித்த ஆரிய மன்னன் பரத குலத்து திவோதாசனின் சந்ததிக்கு ஒருநாள் பாடம் புகட்டப்பட்டே தீரும்.
செய்தவை சிறிதா. எடுத்துச் சொல்லத் தொடங்கினால் அது ஒரு தனிச் சரிதம். ஒன்றைச் சொல்லலாம். உண்மையின் சொரூபத்தை தரிசிக்க ஒரு சொட்டு ஹிமத்தின் உள்ளுறை விறைப்புத்தன்மை போதுமானது.
எங்கள் பெருமூப்பன் சம்பரனின் மரணமே ஒரு பெரும் சாகசம் என்பார்கள். நாற்பதாண்டுக் கால ஓயாத யுத்தத்தில் அவனையும் அவனது ஒருநூறு கோட்டைகளையும் வெற்றி கொள்ள எந்த ஆரிய மன்னனாலும் முடிந்ததில்லை. தோற்றுத் திரும்பிய போதெல்லாம் அவனது கோட்டைகளின் மதிற்சுவரிலிருந்து ஒன்றிரண்டு கற்களைப் பெயர்த்தெடுத்துச் சென்று, அதைச் சொல்லி மகிழ்ச்சி கொள்ளத்தான் அவர்களால் முடிந்ததே தவிர, அவனை நெருங்கக்கூட முடிந்ததில்லை. இறுதி யுத்தத்திலும்கூட மோகனாஸ்திரம் எய்துதான் மயங்கச் செய்து வீழ்த்தினார்கள். வீழ்ந்தபின்பு வேல் எய்து கொன்றுவிட்டு, சம்பரன் பிடிபட்டான் என்று ரிஷிகளைக் கொண்டு பாடச் செய்தார்கள்.
Add Comment