41. அவித்யா
நான் குத்சன். ஒளித்து வைக்க ஒன்றுமில்லாதவன் என்பதே என் அகங்காரம். என் வெளிப்படைத்தன்மையே அந்த சார சஞ்சாரனை முதன்மையாகக் கவர்ந்தது என்பதை அறிவேன். அதை இறுதிவரை காப்பாற்றவும் சித்தம் கொண்டிருந்தேன். ஆனால் அவனோடு நிகழ்த்தும் உரையாடல்களில் என்னையும் அறியாமல் சில குறிப்புகள் எப்படியோ விடுபட்டுப் போய்விடுகின்றன. உரையாடல்களின் அவசியம் அல்லது பொருத்தப்பாட்டின் நிமித்தமாகவே ரகசியங்கள் வந்து தம்மைப் பொருத்திக்கொள்ளும் என்றாலும், ஒரு தேவையின் பொருட்டுப் பிறகு அவன் நினைவில் மீட்டெடுத்துச் சிந்திக்கும்போது சில இடைவெளிகள் உருவாகலாம். அவை தவறான புரிதலுக்கு வழி கோலலாம். அது கூடாது என்று தோன்றியது. விடைபெறுவதற்கு முன்னால் எனது சாரத்தை மொத்தமாக அவன் சிந்தைக்குள் திணித்து வைத்துவிட்டு நகர்ந்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
இதையும்கூட இனி அவனிடம் சொல்லிவிட்டே செய்யலாம் என்று நினைத்த கணத்தில்தான் சாத்தியமே இல்லாததொரு வெக்கை வெளியை நிறைக்கத் தொடங்கியது. உடல் கசகசத்து மெலிதாக வியர்க்க ஆரம்பித்தது. சாரனைப் பார்த்தேன். அவனது கழுத்துப் பகுதியிலும் மெலிதாக வியர்த்திருந்தது. சிறிது வியப்பாக இருந்தது. நாங்கள் நதிக்கரையோரமாகத்தான் நடந்துகொண்டிருந்தோம். நதியின் நீரோட்டம் துல்லியமாக இருந்தது. கரையோரப் பெருந்தருக்களும் நாணற்புற்களும் அசைந்தாடிக்கொண்டேதான் இருந்தன. காற்று வீசியது. அது உடலில் படும்போது உருவாகும் இதமும் குளிர்ச்சியும் எப்போதும் போல இல்லை. உடலிடுக்குகளிலும் உச்சந்தலையிலும் பின் கழுத்திலும் வியர்த்தது வினோதமாக இருந்தது.
‘இரு. அரை நாழிகை இங்கே அமர்ந்துவிட்டுச் செல்லலாம்’ என்று அவனிடம் சொன்னேன்.
அவன் மறுப்பேதும் சொல்லவில்லை. இருவரும் ஒரு செங்கொன்றை மரத்தின் அடியில் சென்று அமர்ந்துகொண்டோம்.
‘கால் வலிக்கிறதா?’ என்று அவன் கேட்டான்.
Add Comment