48. பிரம்ம சித்தம்
பிரம்மத்துக்குப் பதற்றம் என்ற ஒன்றில்லை. பதற்றம் இல்லாத சிந்தை பரிதவிப்பதில்லை. பரிதவிப்பு உணர்ச்சிகளினால் பின்னப்படுகிற ஒரு வலை. எனவே பிரம்மம் உணர்ச்சிகளைக் களைந்தது. ஆனால் மிகக் கவனமாக மனித மனத்தை உணர்ச்சிகளின் மூலக்கூறுகளைக் கொண்டு வடிவமைத்த வினோதத்தைச் சிந்திக்கிறேன்.
இயற்கையின் எல்லா கட்டமைப்புகளுக்கும் அடிப்படை தேடிக் கிளம்புவது அசாத்தியம். பெரும்பாலும் தோற்றுத் திரும்ப நேரிடும். ஆனால் மனித குலத்துக்குச் சாத்தியமானதொன்று உண்டு. உணர்ச்சிகளில் அவசியமானவை-அவசியமற்றவை எவை என்று இனம் பகுத்துப் பிரித்து வைப்பது. அவசியமற்றவற்றை விலக்கியே நிறுத்துவது. நான் அதர்வன். என் மரணத்துக்கு முன்பு எப்போதாவது ஒரு சந்தர்ப்பத்தில் யார் மூலமாகவேனும் குத்சனுக்கு இதனைப் புரியப் புகட்டுவேன். சிக்ஷையாக அல்ல. அவனது சாபத்தின் பொருட்டு நான் கடமைப்பட்டுவிட்டதால் தந்து தீரவேண்டிய கைம்மாறாக.
ஒரு விதத்தில் அவன் பரிதாபத்துக்குரியவன். கிராத குலத்து சார சஞ்சாரனின் சிந்தையில் சேமிக்கப்படுகிற இச்சரிதம் வெளிப்பட்டுப் புலரியின் பொற்கிரணங்கள் நிறைந்து பரவுகிற நிலமெல்லாம் நிறையவிருக்கிற காலத்தில் மானுட குலம் முழுதும் அவனுக்காக இரங்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், முன்சொன்ன உணர்ச்சிகளை முற்றிலும் விலக்கி வைத்துவிட்டு இதனை அணுக முடிந்தால் அவனது பிறப்பு சாரமுள்ளதானாலும் தேவையற்றதென்று தோன்றிவிடும்.
இப்படி நினைப்பதும் பிசகு. பிறப்பு-இறப்பினைத் தீர்மானிக்க நாம் யார்? சிந்தை கண்டுணரவியலாத அம்மாயச் சிறுதுகளின் மணமாக நிறைந்திருக்கிறோம்.
Add Comment