பாகம் 2
51. ஆயுதம்
இருள் முற்றிலும் விலகியிருக்கவில்லை. இரவெல்லாம் நடந்த களைப்பில் சிறிது அமர்ந்து இளைப்பாறலாம் என்று தோன்றினாலும், உடனே வேண்டாம் என்றும் சொல்லிக்கொண்டேன். இன்னும் அரை நாழிகை நடந்தால் அவனது ஆசிரமத்தை நெருங்கிவிடலாம். கடமையைச் செய்து முடித்த பின்பு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஓய்வெடுக்கலாம் அல்லது கொண்டாடித் தீர்க்கலாம். அது முடியும்வரை களைப்பைக் குறித்து எண்ணாதிருப்பதே நல்லது என்று நினைத்துக்கொண்டேன்.
அந்த சூத்திர முனி களைப்படைந்து நான் கண்டதில்லை. என் பிராயத்தினும் இன்னொரு மடங்கு கூடுதலாக வாழ்ந்தவன் அவன். இரவு பகல் பார்ப்பதில்லை. பசி உறக்கம் கருதுவதில்லை. எத்தனைத் தொலைவெனினும் நடந்து கடப்பதையே எப்போதும் அவன் விரும்பினான். அவனோடிருந்த தினங்களில் அவன் உணவு உட்கொண்டு நான் பார்த்ததேயில்லை. பசிக்கிறது என்று சொல்லிவிட்டு நதியில் இறங்கி நான்கைந்து கை நீரள்ளிப் பருகிவிட்டு வந்துவிடுவான். வெறும் நீரை அருந்தி ஒரு மனிதன் எப்படி உயிர் வாழ முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. அவன் சொன்ன தியானம், தவம், தேகத்தைப் புடமிடல் சார்ந்த குறிப்புகள் எதுவுமே எனக்கு விளங்கவில்லை. ‘நீ அவசியமற்று உன்னை வருத்திக்கொள்கிறாய்’ என்று பல முறை அவனிடம் சொல்லியிருக்கிறேன். அப்போதெல்லாம், ‘வருத்திக்கொள்கிறேனா! என்னைக் காட்டிலும் ராஜபோகமாக வாழ்பவன் யாரிருக்க முடியும்?’ என்றுதான் சொல்லுவான்.
ஒரு விதத்தில் அவனைச் சந்திக்க நேர்ந்தது என் பணியை இலகுவாக்கிவிட்டாற்போலத்தான் உணர்ந்தேன். இல்லாவிட்டால் அந்த பிராமணனைத் தேடி இன்னும் எத்தனைக் காலம் அலைந்து திரிந்திருப்பேன் என்று தெரியவில்லை. ஆனால், முனி அவனைக் குறித்துச் சொன்ன பெரும்பாலான விவரங்கள் எனக்குச் சலிப்பையே உண்டாக்கின. வேறு வேறு சொற்களில் இதனை நான் அவனுக்கு அவ்வப்போது தெரியப்படுத்தியிருக்கிறேன். என்ன நினைத்துக்கொண்டானோ, தெரியவில்லை. ஆனால் நான் சலிப்புறும்போதெல்லாம் அவன் பதற்றம் கொண்டதையும் கண்டேன். அவன் தருகிற விவரங்களை நான் சரியாக உள்வாங்காதிருந்துவிடக் கூடாதென்று அவன் நினைத்தான்.
Add Comment