Home » சலம் – 52
சலம் நாள்தோறும்

சலம் – 52

52. மூப்பன்

அதர்வனின் ஆசிரமத்தை நெருங்கியபோது உக்கிரமாகப் பனி பெய்யத் தொடங்கியிருந்தது. இரவு நடந்து வந்த வழியெல்லாம் பனிதான், குளிர்தான். ஆனால் பொறுக்க இயலாத அளவுக்கு இல்லை. இன்னொன்றையும் கவனித்தேன். எங்கள் கிராத பூமியில் நான் காணாத பனியில்லை. நடந்து செல்லும்போது கட்டிக் கட்டியாகவே தலையில் விழும். நிலமே தெரியாத அளவுக்கு வெண்பனி குவிந்து குன்றாக நிற்கும். சிறு வயதில் பனிக் குவியல்களின்மீது படுத்துப் புரண்டு விளையாடுவது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்காக இருந்தது. ஆனால் எந்நாளும் குளிருக்கு அஞ்சி ஒதுங்கத் தோன்றியதேயில்லை.

ஆனால் வித்ருவில் நான் கண்ட பனி வேறாக இருந்தது. ஒரு சீற்றம். ஒவ்வொரு துளிக்குள்ளும் யாரோ ஒரு கங்கைப் பொதிந்துவைத்து அனுப்பினாற்போல, அதன் குளுமைக்குள் சிறிய, மிகச் சிறியதொரு தகிப்பு இருந்தது. சருமத்தில் மோதும்போதெல்லாம் மெலிதாக எரிந்தது. நதியில் இறங்கிக் குளிக்காமல் இருந்திருந்தால் இன்னும் சிறிது சமாளித்து இருக்கலாம். ஆனால் இனி அதைச் சிந்தித்துப் பயனில்லை. முனி கம்பலம் வேண்டுமா என்று கேட்டபோது சரி என்று சொல்லியிருக்க வேண்டும். அதர்வனைப் பற்றி ஆயிரம் கதைகள் சொன்னவன், இந்த ஊரின் குளிர் இப்படி இருக்கும் என்றும் சொல்லியிருக்கலாம். அதர்வனைப் பற்றிய தகவல்களினும் அதுதான் எனக்குப் பேருதவியாக இருந்திருக்கும். காரியம் முடிந்து திரும்பிச் சென்று சந்திக்கும்போது அவனிடம் இதனைச் சொல்ல வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன்.

ஆசிரமத்தின் வேலிப்படலை நெருங்கி நின்று உள்ளே பார்த்தேன். திசைக்கொரு பர்ணசாலை இருந்தது. ஒவ்வொன்றும் நிறைய இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். ஒவ்வொரு பர்ணசாலைக்கு அருகிலும் ஒன்றிரண்டு மரங்கள் இருந்தன. எல்லா மரங்களும் பனி பூசியிருந்தன. என் கண்ணுக்குத் தென்படாத இடத்திலிருந்து நான்கைந்து பேர் மந்திரம் சொல்லிக்கொண்டிருந்த சத்தம் கேட்டது. அது முன்வரிசை பர்ணசாலைகளுக்கு அப்பால் இருந்து வந்துகொண்டிருந்த சத்தம். உள்ளே இன்னும் பல குடில்கள் இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டு வேலிப்படலைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தேன்.

அப்போது தொலைவில் ஒரு பர்ணசாலைக்குள் இருந்து வெளியே வந்த யாரோ ஒருவன் என்னைப் பார்த்தான். உடனே தனக்குப் பின்புறமாகத் திரும்பி வேறு யாரையோ கூவி அழைத்தபடி என்னை நோக்கி விரைந்து வந்தான். அவன் என்னை நெருங்கும்போதே இன்னும் இரண்டு பேர் அவன் பின்னால் வருவதைப் பார்த்தேன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!