56. காணா ஒளி
குடிசையை விட்டு நான் வெளியே வந்தபோது கானகத்து ஓடையில் நீராடிவிட்டு அதர்வன் வந்துகொண்டிருந்ததைக் கண்டேன். தான் குளிக்கும் ஓடையிலேயே அவனும் நீராட வருவது பற்றி சூத்திர முனி பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறான். எத்தனையோ சம்பவங்கள். எவ்வளவோ அனுபவங்கள். எல்லாமே ரணம் மிகுந்தவை. அவன் எதிர்பார்த்ததெல்லாம் சிறிய, மிகச் சிறியதொரு அங்கீகாரம். முனி என்று ஏற்க முடிந்தவன் முழுமையைக் காட்டித் தந்தால் ஆகாதா? அதற்காகத்தான் அவன் அதர்வனைச் சுற்றிச் சுற்றி அலைந்திருக்கிறான். பிக்ஷை கேட்பவனைப் போலக் கையேந்தி நின்றிருக்கிறான். நிராகரிக்கப்பட்டபோதெல்லாம் கண்ணீர் சிந்தியிருக்கிறான். எல்லாமே பயனற்றுப் போயின. ஒவ்வொரு நாளும் அவனது பிராண வாயு தோல்வியின் துர்நாற்றத்தைச் சுமந்தே, கூசக் கூச அவனது உடலமெங்கும் அலைந்து திரிந்து வெளியேறியிருக்கிறது. ‘அவன் என்னை ஏற்றிருக்கக் கூட வேண்டாம். ஏற்காததன் காரணத்தை மட்டுமாவது சொல்லியிருக்கலாம்’ என்று ஒருமுறை முனி சொன்னான். நியாயம் என்றுதான் தோன்றியது.
அதர்வனைப் பார்த்த கணத்தில் எனக்கு அதுதான் நினைவுக்கு வந்தது. என்ன மனிதன் இவன்! அவனைப் புரிந்துகொள்வது அத்தனை எளிதல்ல என்று தோன்றியது. அவன் நல்லவன். அதில் ஐயமில்லை. ஆனால் நத்தை தனது அவயங்களைக் கூட்டுக்குள் ஒடுக்கிக்கொண்டு ஒதுங்கிக் கிடப்பது போலத் தன் மனத்தை இழுத்துப் பூட்டிக்கொண்டு என்னவோ செய்துகொண்டிருக்கிறான். தன் மரணத்தையும் அன்போடு எதிர்கொள்ள ஒருவனால் முடியுமென்றால் நிச்சயமாக அவன் பொருட்படுத்த வேண்டியவன்தான்.
இன்று அவனிடம் பேசிவிடுவது; அல்லது அவனைப் பேச வைத்துவிடுவது என்று முடிவு செய்துகொண்டேன். அவன் வருகைக்காகவே காத்திருப்பவனைப் போல குடிசையின் வேலிப் படலை விட்டு வெளியே வந்து நின்றேன்.
அருகே வந்ததும் நான்கடி இடைவெளியில் அவன் நின்றான்.
‘இரவு நன்றாக உறங்கினாயா?’ என்று கேட்டான்.
‘உறங்கினேன் ரிஷியே. இப்போது காய்ச்சல் இல்லை.’
‘இனி வராது.’
‘உறுதியாகவா?’
Add Comment