60. சரம்
வாழ்நாளில் அப்படியொரு விருந்துணவை அருந்தியதில்லை. வேறு வேறு பக்குவங்களில் சமைக்கப்பட்ட கறி வகைகளும் எங்கெங்கிருந்தோ தருவிக்கப்பட்ட ருசி மிகுந்த கனி ரகங்களும் பசும்பாலில் சவ்வரிசியையும் நெய்யையும் சேர்த்து வேகவிட்டு, மது சேர்த்துப் பரிமாறப்பட்ட புரோடாஷ் என்கிற பானமும் சோமத்தையும் தயிரையும் கலந்து தயாரித்த தத்யாஷிர் என்கிற கிறக்கம் தரும் உணவும் சேர்ந்து ஒரு படைபோல அடித்து வீழ்த்திவிட்டன. உண்டு முடித்த பிறகு என்னால் எழக்கூட முடியவில்லை. அப்படியே கால் நீட்டிப் படுத்துவிடலாம் என்று தோன்றியது.
ஆனால் முடியாது. அது ராஜனின் மாளிகை. அரங்குக்கோர் ஒழுக்கம் கடைப்பிடிக்கச் சொன்னார்கள். முதலில் சபைக்குச் சென்றபோது முற்றத்துக்கு அப்பால் அதர்வனின் மாணாக்கர்கள் சிலர் நின்றுகொண்டார்கள். நான் அதைக் கவனிக்கவில்லை. அதர்வனுடன் முன்னால் சென்ற வேறு சில மாணாக்கர்களின் பின்னால் போனேன். காவலன் என்னை மரியாதையாக அணுகி, ‘இங்கே நில்லுங்கள்’ என்று கைகாட்டினான். பிறகு கவனித்தபோது புரிந்தது. அதர்வனுடன் முன்னால் சென்ற மாணாக்கர்கள் பிராமணர்கள். முற்றத்துக்கு அப்பால் நின்றவர்கள் சத்திரியர்களும் வைசியர்களும். ராஜனின் சபையிலும்கூட அவனுக்கு எதிரில் முதல் வரிசையில் பிராமணர்களுக்குத்தான் இருக்கை இருந்தது. மற்றவர்கள் இரண்டாவது, மூன்றாவது வரிசையில்தான் அமர்ந்திருந்தார்கள்.
அதர்வனுக்காக அங்கே காத்திருந்த அனைவரும் அவனைக் கண்டதும் எழுந்து நின்று வணங்கினார்கள். அவன் ராஜனுக்கும் அவனது பத்தினிக்குமாகச் சில மங்கலச் சொற்களைச் சொல்லி ஆசீர்வதித்தான். தொட்டிலில் இடப்பட்டிருந்த குழந்தையை நெருங்கி அதன் நெற்றியைத் தொட்டான். கண்மூடி ஏதோ சொன்னான். பிறகு உரத்த குரலில் அவன் மந்திரம் சொல்லத் தொடங்கவும், அவனது மாணாக்கர்கள் உடன் சேர்ந்து சொல்ல ஆரம்பித்தார்கள்.
ஒரு நாழிகைப் பொழுதுக்கு நீடித்த மந்திர உச்சாடனம் நிறைவடைந்த பின்பு அவன் தனது கமண்டலத்தில் இருந்து நீரை எடுத்துக் குழந்தையின் மீது தெளித்தான். அது சிலிர்த்துக்கொண்டு சிணுங்கியது. அதே நீரை ராஜன் சிரத்திலும் அவனது பத்தினியின் சிரத்திலும் தெளித்தான்.
Add Comment