61. சுத்தி
ஒரு குன்றினைப் போல அடர்ந்து கவிந்திருந்த நியக்ரோதத்தினடியில் ரிஷி ஆசனமிட்டு அமர்ந்திருந்தான். அவனது இரு புருவங்களுக்கு நடுவில் உயர்ந்து பொலிந்த அக்னி பஸ்மத்தையே நெடுநேரமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். நதி தொட்டு வந்து மோதிய காற்றில் அவனது சடாமுடியும் தாடியும் தருவின் மேற்புறக் கிளைகளைப் போலவே அசைந்தாடிக் கொண்டிருந்ததைக் காண ரசமாக இருந்தது. அவனது சீடர்கள் அவனுக்கு எதிரே வரிசையாக அமர்ந்திருந்தார்கள். அவன் ஏதோ ஒரு மந்திரத்தைச் சொல்லிப் பொருள் சொல்வதும், யாராவது ஒரு மாணாக்கன் ஏதோ ஒரு சந்தேகம் எழுப்புவதும் அதற்கு அவன் விளக்கம் தருவதும் அதைத் தொட்டு வேறொரு வினா எழுவதும் அதைத் தீர்த்து வைப்பதுமாகப் பொழுது கரைந்துகொண்டிருந்தது.
எனக்கு அந்த அனுபவம் மிகவும் வினோதமாகவும் வியப்புக்குரியதாகவும் இருந்தது. நான் எதற்காக இதையெல்லாம் உட்கார்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறேன்? உண்மையிலேயே புரியவில்லை. அவன் ஏதோ மாயம் செய்து தன்னைக் கொல்ல விடாமல் என்னைத தடுக்கிறான் என்று அவ்வப்போது தோன்றிக்கொண்டே இருந்தது. ஆனால் அவனது பேச்சும் நடத்தையும் அப்படிச் செய்யக்கூடியவனல்லன் என்று உடனுக்குடன் தெரிவித்துக்கொண்டே இருந்தன. உண்மையிலேயே தன்னை மாய்ப்பதற்கான வழியைக் காட்டித்தர அவனுக்குத் தெரியவில்லை என்றே நம்ப விரும்பினேன்.
ஏனெனில், அன்றைக்கு அவனிடம் சொல்லாமல் ஒரு வேலை செய்தேன். நிச்சயமாகவே அவன் எதிர்பார்த்திருக்க முடியாத செயல். நானே எண்ணிப் பார்த்திராததும்கூட. மிகவும் தற்செயலாக அது அமைந்தது.
முன்தினம் அந்தி சாயும் நேரத்தில் வனத்துக்குள் இலக்கின்றி அலைந்துகொண்டிருந்தபோது நல்ல விஷமுள்ள பெரிய சர்ப்பமொன்று எனக்கு நான்கடி தொலைவில் ஊர்ந்து கடப்பதைக் கண்டேன். சர்ப்ப விஷம் இறக்கி நெடுநாள்களாகிவிட்டன என்றாலும் அப்போது முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. சர்ப்பத்தின் பின்புறமாகவே சிறிது தூரம் சென்று, அது புதருக்குள் நுழையவிருந்த கணத்தில் தாவி அதன் சிரத்தைப் பிடித்துத் தூக்கினேன். நாற்பத்திரண்டு கணப் பொழுதில் சர்ப்பத்தின் விஷம் வெளியேறும் விதத்தில் அதன் கண்டத்தை அழுத்துவது எப்படி என்று எனக்குத் தெரியும். இடக்கரத்தின் நடு விரலையும் கட்டை விரலையும் அண்டக் கொடுத்து, வலக்கரத்தின் முதல் மூவிரல்களால் கீழ்ப் பகுதியிலிருந்து அழுத்தம் தர வேண்டும். அதன் உடல் துடித்துச் சறுக்கப் பார்க்கும். அப்படி ஆகாதிருக்க அதனை எடுத்துத் தோளில் போட்டு ஒரு சுற்று சுற்றி வைக்க வேண்டும். சர்ப்பம் சற்று நீண்டதெனில் அதன் வால் பகுதியைக் கால்களுக்கடியில் அழுத்திக்கொண்டு கண்டத்தை அழுத்தத் தொடங்கலாம்.
Add Comment