62. இடக்கண்
நான் தனித்திருக்கிறேன். அலை புரண்டோடும் சரஸ்வதியின் கரையில் அதே நியக்ரோதத் தருவின் அடியில்தான் அமர்ந்திருக்கிறேன். கிளிகளும் குருவிகளும் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து சத்தமிடுகின்றன. உழைத்துக் களைத்து வீடு திரும்பும் உழவர்கள் அலுப்பில் சிறிது ஓய்வெடுக்க என்னருகே அமர்கிறார்கள். கால்நடைகளை மேய்த்துத் திரும்பும் பரதர்கள் உரத்த குரலில் பேசிச் செல்கிறார்கள். சந்தி செய்ய நதி தீரத்துக்கு விரையும் அந்தணர்களைப் பார்க்கிறேன். அவர்களைக் கண்டதும் மரியாதை நிமித்தம் எழுந்து, நகர்ந்து நிற்கும் சூத்திரர்களைப் பார்க்கிறேன். நகர்ந்து நிற்போரையும் இன்னும் தள்ளிப் போகச் சொல்லிக்கொண்டே அவர்கள் நதியில் இறங்குவதைக் காண்கிறேன். என்னைத் தேடிக்கொண்டு அங்கே வரும் என் மாணாக்கர்கள் மூவர், சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டுக் காணாமல் திரும்புவதைப் பார்க்கிறேன். அந்திக்கென மித்திரன் தனது பொற்கரங்களால் தீட்டியனுப்பும் கிரணக் கீற்றுகளை சரஸ்வதி புனிதமூட்டி அனுப்பிக்கொண்டிருக்கிறாள். மித்திரன் அனைவருக்குமானவன். சரஸ்வதி அனைவருக்குமானவள். பிருத்வியும் வருணனும் அக்னியும் பேதமின்றி அள்ளித் தருகிறார்கள். வளங்களும் அருளும் ஆசியும் அனைவருக்குமானவை. பசுக்கள் அமுதம் சொரிகின்றன. வனம் ஔஷதிகளைக் காட்டித் தருகிறது. பர்ஜன்யன் தானியங்களை உண்டுபண்ணுகிறான். எல்லாம் வெளிப்படையாகவே நடக்கின்றன. எல்லோருக்கும் பொதுவாகவே நடக்கின்றன. மனித குலத்தை ஆசிகளின் பெருங்குடை கவிந்து காக்கிறது.
நான் அதர்வன். கவிந்த குடையின் நிழலில் என்னைக் கரைத்துக்கொண்டு காட்சிகளின் ஊடாக என் சிந்தையைக் கையிலேந்திச் சென்று சாரனின் சிந்தைக்குள் செலுத்திக்கொண்டிருக்கிறேன். அவன் ஒரு வினாவை என்னிடம் முன்வைத்தான். நான் அதற்கு பதிலளித்தாக வேண்டும். பேதங்களைப் பற்றியது. பிரிவினையைப் பற்றியது. என் வகுப்புகளில் என் மாணாக்கர்களின் ஸ்தானம் பற்றியது.
அவன் கேட்டதில் பிழையில்லை. அவனைத் தவிர இன்னொருவர் கேட்டுவிட இயலாத வினா அல்லவா? வித்ருவில் மட்டுமல்ல. சப்த சிந்து தீரங்களில் தொடங்கி, கிழக்கே நான் காணாத் தொலைவில் பாயும் கங்கையின் மடிவரை விரிந்து பரவி வசிக்கும் ஆரியர் அனைவருக்கும் பொதுவான அடிப்படைப் பிரச்னையை அவன் தொட்டான். பிரச்னை என்று அவர்கள் கருதாத ஒன்றன் பரிணாமம் பின்பு என்னவாகச் சிலிர்த்தெழுமென்று அதற்கு வெளியில் இருக்கும் ஒருவனால் மட்டும்தான் உணர்ந்தறிய முடியும்.
ஆனால் சாரனும் அந்தச் சூத்திர முனியைப் போல உணர்ச்சிகளின் கூர்த்த பற்களினிடையே தன்னைப் பொருத்திக்கொண்டுவிடுகிறான். பிழையென்று சொல்லிவிட இயலாதுதான். ஆரியனல்லன் என்றபோதும் மனிதனே அல்லவா?
Add Comment