66. சொல்லாதது
பூர்ணிமை கடந்து சில தினங்கள்தாம் ஆகியிருந்தன என்றாலும் வானில் வெளிச்சமில்லாமல் இருந்தது. ருத்ர மேருவின் சர்சுதி கடக்கும் அடிவாரமெங்கும் பெரிய பெரிய பாறைகள் நிறைந்திருக்கும். பாறை நிறைந்த இடங்களில் தருக்கள் இராது. மேருவின்மீது சிறிது தூரம் ஏறிச் சென்றால்தான் வனம் தொடங்கும். நான் பகலெல்லாம் வனத்தில் இருந்துகொண்டு இரவானால் நதிப் படுகைக்கு வந்துவிடுவதென்று முடிவு செய்திருந்தேன். என் மனநிலைக்கு நதியின் இரைச்சல் அப்போது இன்றியமையாததென்று தோன்றியது.
இரைச்சல். என் மனத்தில் அந்தச் சொல் தோன்றியதற்கே அது அழுதிருக்கும். முதல் முதலில் அதனைக் கண்ட நாள்தொட்டு, அதையே ஆகாரமாக்கிக்கொண்ட காலம் வரை தியானப் பயிற்சிகளுக்கு அதன் சுருதியைத்தான் கருவியாக வைத்திருந்தேன். சர்சுதியின் நீரை மட்டுமே அருந்தி நான் உயிர் வாழ வேண்டுமென்று எனக்கு வரமளித்த அஹிபுதன்யனிடம் கேட்டு சாதித்துக்கொண்ட அன்று நானடைந்த பரவசத்தைச் சொல்லில் கட்டிக் காட்ட இயலாது. ஒன்பது தினங்கள் நீருக்குள் நின்றவாறே தவம் புரிந்து அம்மகிழ்ச்சியைக் கொண்டாடினேன். புவியில் எவனுக்குமே சாத்தியமற்ற தீரா உணவின் ஏகபோக உரிமையாளனாக என்னை எண்ணிப் பார்க்கவே பரவசமாக இருந்தது.
சர்சுதியில் சூத்திரர்கள் இறங்கத் தடை இருந்த காலமொன்று இருந்தது. அதர்வனே அதைத் தனது மாணாக்கர்களுக்குச் சொல்லக் கேட்டிருக்கிறேன். கவசன் என்ற பெயர் கொண்ட சூத்திரன் தாகத்துக்கு நீர் அருந்த சர்சுதியில் இறங்க முற்பட்டபோது ரிஷிகள் அவனை அடித்துத் துரத்தினார்கள். பாலை நிலத்தில் அவன் நீரின்றி மயங்கி விழவிருந்த சமயத்தில் சர்சுதி அவனிடமிருந்து சொல்லாக வெளிப்பட்டாள். போதாதென்று, தன் பாதையை மாற்றிக்கொண்டு அவன் விழுந்த பாலை நிலத்தின்மீதே பாய்ந்து வந்து அவன் தாகம் தணித்தாள். இதைக் கண்ட பிறகு ரிஷிகள் மனம் திருந்தி அவனைத் தங்களோடு சேர்த்துக்கொண்டார்கள் என்று அவன் சொன்னான்.
அவனது மாணாக்கர்கள் இந்தச் சரிதத்தை ஆர்வமுடன்தான் தெரிந்துகொண்டார்கள். ஆனால், மறுநாளே அவர்களது தாய் தகப்பன்மார்கள் கூட்டமாக ஆசிரமத்துக்கு வந்துவிட்டார்கள்.
‘மகரிஷி, நீங்கள் சொன்ன சரிதம் நடந்ததாக இருக்கலாம். ஆனால் எங்கள் பிள்ளைகளுக்கு அது தேவையில்லை’ என்று விண்ணப்பித்துக்கொண்டதாக அச்சம்பவத்தை அருகிருந்து கண்ட என் தகப்பன் பிறகு என்னிடம் சொன்னான்.
Add Comment