70. தெய்வம் தொழான்
‘உன்னைத் தாக்கவும் முடியவில்லை; வீழ்த்தவும் முடியவில்லை என்பது வியப்பாக உள்ளது. நீ ஏன் உன்னைச் சரியாக அறிமுகப்படுத்திக்கொள்ளக் கூடாது?’ என்று அஜிகர்த்தன் வினவினான்.
குத்சனுக்கு அவன் மீண்டும் மீண்டும் அதனைக் கேட்டது மிகவும் சலிப்பூட்டியது.
‘இதோ பார், என்னாலும் உன்னைக் கொல்ல முடியவில்லை. ஆனாலும் முயற்சியைத் தொடர்கிறேனே தவிர, உன்னை விசாரித்துக்கொண்டிருக்கவில்லை. நீ ஏன் சற்று அமைதியாக இருக்கக் கூடாது?’ என்று கேட்டான்.
‘அது என்னால் முடியாது சூத்திரனே. இறந்தவர்களை உயிர்ப்பிக்கத் தெரிந்தவன் நான். உன் ரிஷிகள், தேவர்களினும் பெரியவன். துவளாதவன். தோல்வி அறியாதவன். தனி ஒருவனாக எத்தனை பெரிய சேனையையும் எதிர்த்து வெல்ல வல்லவன். என்னால் ஒரு அற்ப சூத்திரனைச் சாய்க்க முடியாது என்பது அநேகமாக என் கனவில் நிகழ்வதாக இருக்க வேண்டும்.’
‘நல்லது. அப்படியே இருக்கட்டும். எனக்கு அதில் எந்தச் சிக்கலுமில்லை. ஆனால் நீ எத்தனை முறை கேட்டாலும் நான் அதே அற்ப சூத்திரன்தான். உனக்குத் தெரிந்த தந்திரோபாயங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. அதர்வனைப் போல யக்ஞம் நிகழ்த்தி தேவர்களின் சகாயம் பெற வக்கற்றவன். நான் தவம் புரிந்ததில்லை. சித்திகள் கைவரப் பெற்றவனில்லை. யாரிடமும் அமர்ந்து எப்பாடமும் கேட்டதில்லை…’
‘ஆனால் நான் ஏவும் சக்தி எதுவும் உன்னைத் தீண்டுவதில்லை. அது எப்படி சாத்தியம்?’
‘அதை உன் அடிமைகளிடம் கேள். என்னைக் கேட்காதே.’
Add Comment