74. மூன்றாவது வழி
மனித குலம் தோன்றிய நாளாகத் துரத்தும் வினா ஒன்றுண்டு. துன்பங்கள் ஏன் உண்டாகின்றன?
இன்பமும் துன்பமும் சிந்திப்பதால் வருபவை. இன்பம் எப்போதும் வேண்டியிருப்பதால் சிந்திக்காதிருப்பதில்லை. சிந்திக்காதிருக்க முடியாதென்பதால் துன்பங்களைத் தவிர்க்க முடிவதில்லை. எய்த சரம் எதிலாவது சென்று மோதித்தான் தீர வேண்டும்.
சிக்கல் அதுவல்ல. ஒருவர் துன்பத்துக்காக வேறொருவர் சிந்திக்க முனைவதில் தொடங்குகிறது எல்லாம். ஆனால் உலகுள்ள வரை இதனை யாரும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. நான் என் இன்பத்துக்காகச் சிந்தித்தேன் என்ற எளிய பதிலில் எல்லாம் உறைந்து நிற்கும். எனது இன்பம் இன்னொருவரின் துன்பமாகும் என்பதினும் பெரிய வன்முறை வேறில்லை. ஆனால் பிரபஞ்சத்தின் கட்டமைப்பு அப்படித்தான் உள்ளது. நல்லது. தனி மனிதர்களினும் ஒரு பெரும்பான்மைக் கூட்டத்தின் நலனைக் கருதுவதுதான் இதன் தீர்வாக இருக்க முடியும். தாற்காலிகமாகவேனும்.
‘ரிஷியே, யாரையும் கொல்லக் கூடாதென்கிறாய். வித்ருவின் மக்களைக் காக்க வேண்டுமென்கிறாய். நீ பேசுவது உனக்கே பொருளற்றதாகத் தோன்றவில்லையா?’ என்று குத்சன் என்னைக் கேட்டான்.
‘கொலைதான் பொருள் என்று நினைக்கிறாயா?’
‘இதோ பார். உனக்குப் பலமுறை சொல்லிவிட்டேன். அஜிகர்த்தனைக் கொல்ல முடியாது. அவன் இரண்டு வன தெய்வங்களிடம் வரம் பெற்றிருக்கிறான். ஒரு தெய்வம் அவனுக்கு ரோமம் நரைக்காது என்று வாக்களித்திருக்கிறது. இன்னொரு தெய்வம், நரை தோன்றும்வரை மரணமில்லை என்று சொல்லியிருக்கிறது. இந்த இரண்டு வரங்களை வைத்துக்கொண்டுதான் அவன் விளையாடிக்கொண்டிருக்கிறான்.’
Add Comment