Home » சலம் – 75
சலம் நாள்தோறும்

சலம் – 75

75. சம்ஹாரம்

ஊழிக்கனல் உருத் திரண்டு நடந்து வருவது போலிருந்தது அவனது தோற்றம். சிரம் தொடங்கித் தோள்கள் வரை நீண்டு, காற்றில் பறந்தாடிய அடர்ந்து நீண்ட ரோமங்களும் பேரண்டத்தைப் பிளந்துவிடும் கூர்மையுடன் இமைக்காது நோக்கிய விழிகளும் மேரு அதிர்ந்து அடங்குவது போல அவன் எடுத்து வைத்த உறுதியான அடிகளும் அதன் வேகமும் ஆவேசமும் யாரையும் நிச்சயமாக அச்சம் கொள்ளச் செய்யும். எனக்கு நன்றாகத் தெரிந்தது. அவன் தன் வயத்தில் இல்லை. அவனது நோக்கம் ஒரு விசையாக அவனைச் செலுத்திக்கொண்டிருந்தது. அதில் இருந்த உறுதி அவனது சித்தத்தைக் குவித்தது. இன்னொரு தினமென்று ஒன்றில்லை; இன்றே அவனைத் துரத்தியடிக்கிறேன் என்று புறப்பட்ட கணத்தில் தன் மனத்துக்குள் உச்சரித்து, அதனை உருட்டி எடுத்து என்னை நோக்கி வீசி எறிந்துவிட்டே கிளம்பினான். அவன் ஒரு வழியைக் கண்டறிந்திருக்கிறான் என்பது தெரிந்ததே தவிர, அது என்னவென்று எனக்குப் புரியவில்லை. தன் மனத்தை முற்றிலுமாக இழுத்துக் கட்டி ஒற்றை இலக்கின்மீது அவன் குவித்திருக்கும் தருணத்தில் நான் உட்புகுந்து ஆராய விரும்பவில்லை. அது நியாயமும் இல்லை. எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. என்னை முற்றிலும் வெறுப்பவனாக அவன் ஆகிப் போனாலும் என் சொல்லை மதிக்காதிருக்க மாட்டான். எனவே, ஆசனமிட்டு தியானத்தில் அமர்ந்து வெறுமனே அவனைப் பார்த்துக்கொண்டிருக்கத் தொடங்கினேன்.

வனத்தைக் கடந்து வெளியேறும் தருணத்தில் அவன் சிறிது தாமதித்தான். என்ன நினைத்தானென்று தெரியவில்லை. மீண்டும் வனத்துக்குள் சென்று எதையோ தேடினான். ஒரு புற்றைக் கண்டடைந்து அதனுள்ளே கையைவிட்டு சர்ப்பமொன்றை வெளியே எடுத்தான். எதிர்பாராது ஒரு மனிதன் கழுத்தைப் பிடித்ததால் உண்டான அதன் சீற்றத்தின் தொனி இருளைக் கிழித்து உதிர்ந்தது. கணப் பொழுதே தென்பட்டாலும் அதன் கண்களை நான் பார்த்துவிட்டேன். அவை குத்சனின் கண்களைப் போலவே இருந்தன. அவன் தனது தோளைச் சுற்றிப் போட்டிருந்த துணியை அதன் மீது சுற்றி முகத்தைக் கட்டினான். சர்ப்பம் துடித்தது. அதைப் பொருட்படுத்தாமல் ஒரு கயிறைச் சுருட்டுவது போல அதனைத் தனது இடக்கரத்தில் சுற்றிச் சொருகிக்கொண்டு நடக்கத் தொடங்கினான்.

வித்ருவின் கோட்டை வாயிலை அவன் நெருங்கியபோது விடிவதற்கு மூன்று நாழிகைப் பொழுது இருந்தது. வாயில் சேவகன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததை குத்சன் கண்டான். அவனை எழுப்பாமல் திட்டி வாசலை சத்தமின்றித் திறந்து உள்ளே சென்றான். கவனமாகத் திறந்த கதவை மூடிவிட்டு வேகமாக நடக்கத் தொடங்கினான்.

வித்ருவின் புரத்து மக்கள் விழித்திருக்கவில்லை. ஊரடங்கிய சிறுகாலைப் பொழுதில் வீடுகளும் மாளிகைகளும் நிழல் படிவங்களாகக் காட்சியளித்தன. வீதியில் உறங்கும் நாய்களும் அசைவற்று உறங்கிக்கொண்டிருந்தன. அவன் எதையுமே கவனிக்காமல் ராஜனின் மாளிகையை இலக்காக வைத்து நடந்துகொண்டிருந்ததைக் கண்டேன். மாளிகையின் வாயிலை அவன் நெருங்கியபோது, காவலுக்கு இருந்தவர்களை ஏய்த்துவிட்டு உள்ளே செல்ல முயற்சி செய்வானென்று நினைத்தேன். ஆனால் அப்படிச் செய்யவில்லை. தன் இலக்கு ராஜனின் மாளிகையல்ல என்பது போல, அந்தப் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காமல் நடந்துகொண்டே இருந்தான்.

இது எனக்கு வினோதமாக இருந்தது. அவனது நோக்கம் புலப்பட மேலும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!