79. சாபம்
வெற்றி என்று எதையும் நினைக்கத் தெரியாதவனுக்குத் தோல்வி என்ற ஒன்றனைப் பற்றி எதுவும் தெரிந்திருக்க நியாயமில்லை. நான் வெற்றியை எண்ணியவனல்லன். ஆனால் தோல்வி எப்படிப்பட்டது என்பதை அன்று கண்டேன். குத்சனின் மீது நான் கொண்டிருந்தது அன்பல்ல. அனுதாபமல்ல. இரக்கமல்ல. மதிப்பல்ல. வேறெதுவுமல்ல. நம்பிக்கை. அவன் மூல பிரம்மத்தின் ஒரு கருவியாக நியமிக்கப்பட்டிருந்ததை நான் கண்டுகொண்டேன். அது பன்னெடுங்காலத்துக்கு முன்னர் நடந்தது. ஒரு கருவிக்குரிய குணத்துக்கு அப்பால் அவன் தன் முகம் காட்டிய போதெல்லாம் நான் அவனுக்குச் சுட்டிக் காட்டி வந்திருக்கிறேன். கண்டித்திருக்கிறேன். தன் படைப்பின் நோக்கம் சிதைவுறத் தானே ஒரு காரணமாவதைக் காட்டிலும் அபத்தம் வேறுண்டா?
அவன் விஷயத்தில் அதுதான் என்னை மீண்டும் மீண்டும் சிந்திக்க வைத்தது. அவன் ஒரு சாமானியனாக மட்டும் இருப்பானானால் மிக நிச்சயமாக அவன் வழியாக மந்திரங்கள் வந்திருக்காது. எனக்கு அதில் சற்றும் சந்தேகமில்லை. தன்னை ஒரு கருவியாகக் கொண்டு அழியாப் பெருஞ்சொற்கள் உற்பத்தியாவதைக்கூட ஒருவனால் உணர முடியவில்லை என்றால் அவன் ஒரு முனியாக இருந்து என்ன பயன், வேறொன்றாக இருந்து என்ன பயன்?
சிகாரிகள் மொத்தமாக எரிக்கப்பட்டபோது அதற்கு அவனே காரணம் என்று நான் சொன்னேன். ஆனால் அவனிடம் மட்டும்தான் அதனைச் சொன்னேன். விஸ்வபதி வந்திருந்தபோது அவரிடம்கூட அதைக் குறித்துப் பேசவில்லை. மறைக்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல. நான் சொல்வதை விளங்கிக்கொள்ளக்கூட வித்ருவில் யாருமில்லை என்கிற உண்மையை நானறிவேன். ஆனால், நான் சொன்னது அவனுக்குப் புரிந்தது. அவன் கத்தினான். சண்டையிட்டான். வசவுச் சொற்களால் என்னைத் தாக்கினான். ஆனால் புரிந்துகொண்டான். ஆம். அம்மரணங்களுக்கு அவன்தான் காரணம். வித்ருவின் மக்களல்ல. வீரர்களல்ல. வேறு யாருமல்ல.
அவனால் அதைப் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் முடிந்தது என்னும்போது, அதற்கும் பிறகு நான்கு பிராமணர்களை அடித்தே கொன்றான் என்பதை எப்படி வகைப்படுத்துவது என்று எனக்கு விளங்கவில்லை.
Add Comment