82. ஒளியும் நிழலும்
அவன் ஒரு முனி என்று மகரிஷி அத்தனை பேர் முன்னிலையில் சொன்னபோது எனக்கு அது ஒரு புகழ்ச்சி, பாராட்டு, அங்கீகாரம் என்ற அளவில் புரிந்தது. மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. யாரைச் சந்திக்க நேர்ந்தாலும் எட்டடி தொலைவைக் கணக்கிட்டு நின்று மண் பார்த்துப் பேசியே பழகிவிட்டிருந்தவளுக்கு முதல் முறையாக நிமிர்ந்து முகங்களைப் பார்க்கும் தருணத்தை அவர் அப்போது தந்தார். ஆனால் அம்மகிழ்ச்சி நெடுங்காலம் நீடித்திருக்க அமையவில்லை. மகரிஷியைச் சபித்துவிட்டு அவன் ஊரை விட்டுச் சென்ற பிறகு நானும் என் பதியும் உயிர் துறந்தோம். ஒரு நீசன், குலத்தோடு ஒழிந்தான் என்று வித்ருவின் பிராமணர்கள் திரும்பத் திரும்பச் சில காலம் சொல்லிக்கொண்டிருந்துவிட்டு மறந்து போனார்கள். அவன் முனியென்று மகரிஷி சொன்ன சொல், கால வெளியில் எடுப்பாரற்று எங்கோ சென்று புதைந்து போனது.
உண்மையில் அச்சொல்லின் பூரணம் அப்போது எனக்கு விளங்கவில்லை. இப்போது அதனை தரிசித்தேன். என்னெதிரே அமர்ந்திருந்தவன் என் மகன்தானா என்று பார்த்துப் பார்த்து வியந்துகொண்டிருந்தேன். அவனது அமைதி நான் காணாதது. அந்த நிதானம் அவனிடமே அதற்குமுன் இல்லாதது. ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
அந்தக் கிராத குலத்து சார சஞ்சாரன் புறப்பட்டு வந்துகொண்டிருக்கிறான் என்பதை தியானத்தில் கண்டறிந்த கணம் பைசாசக் குன்றே அதிரும்படியாக அவன் ஓங்கிக் குரலெடுத்துக் கூவினான். புவி அதிர்ந்து அடங்கினாற்போன்ற உணர்வு மேலிட, அக்குன்றின்மீது வசித்துக்கொண்டிருந்த மக்கள் அனைவரும் வீதிக்கு ஓடி வந்துவிட்டார்கள். அவர்களது ராஜன், யாரோ படையெடுத்து வருகிறார்கள் என்று நினைத்து நாற்புறமும் சேனைகளை அணி வகுக்க உத்தரவிட்டதைக் கண்டு அன்றெல்லாம் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தேன்.
இது எதுவும் அறியாதவனாகக் குத்சன் ஆனந்தம் மேலிட எழுந்து தாண்டவமாடத் தொடங்கினான். அவன் பாதம் பதிந்த இடமெல்லாம் குழிந்து போயின. அவ்வளவு அழுத்தம். அவ்வளவு வேகம். அவ்வளவு வெறி. ஆடி முடித்து ஓய்ந்ததும் அஹிபுதன்யனை நினைத்தான். தாமதமின்றி அவன் தோன்றி என்ன வேண்டுமென்று கேட்டபோது, ‘அவன் நேரே இக்குன்றுக்கு வந்து சேர வேண்டும். வழியில் வேறெங்கும் தடம் மாறக் கூடாது’ என்று சொன்னான்.
Add Comment