Home » சலம் – 89
சலம் நாள்தோறும்

சலம் – 89

89. மூடன்

ருத்ர மேருவின் சிகரத்திலிருந்து அப்போதுதான் இறங்கி வந்திருந்தேன். பாறைகள் நிறைந்த சர்சுதியின் கரைக்கு வந்து சேர்ந்தவுடனேயே பசிக்கத் தொடங்கியது. எத்தனை தினங்கள் உண்ணாதிருந்திருக்கிறேன் என்ற நினைவே இல்லை. அது ஒரு பொருட்டாகத் தோன்றவுமில்லை என்பது மிகுந்த நிறைவை அளித்தது. அதே சமயம் தாயைக் கண்ட குழந்தையைப் போல சர்சுதியின் ஓசை உண்டாக்கிய மனக் கிளர்ச்சியையும் விழிப்புடன் கவனித்தேன். உண்மையில் எனக்கு அது வியப்பாக இருந்தது. எத்தனையோ பல சம்வத்சரங்களுக்குப் பிறகு என்னைப் பெற்றவள் என்னைத் தேடி வந்திருந்தாள். வேறொரு மகனானால், அவளது குரலைக் கேட்ட கணத்தில் கதறிவிட்டிருப்பான். எனக்கு ஏன் அப்படி நிகழவில்லை என்று எண்ணிப் பார்த்தேன். உண்மையிலேயே காரணம் விளங்கவில்லை.

அவள் எனக்கு வெறுமனே பெற்றுப் போட்டுக் கடமை தீர்த்தவளில்லை. பிறந்த உயிரினம் அனைத்தும் அதனைச் செய்யும். முனி என்று என்னைச் சொன்னவன், நான் இனி அது இல்லை என்று அறிவித்த பின்பு, ஒன்றுமற்றவனாகத் துவண்டு கிடந்த சமயத்தில், அவள்தான் எனக்கு அஹிபுதன்யனைக் காட்டித் தந்தாள். நான் பிறந்ததும் முலைப்பால் தந்ததினும் தான் இறந்ததும் அவள் செய்த அச்செயல் மிகப் பெரிது. ஒரு வகையில் அது என் மறுபிறப்பு. அதர்வனின் மொழியில் சொல்வதெனில் அதன்பிறகு நான் சூத்திரனில்லை. துவிஜனாகிப் போனவன். அதையுமேகூட நானேதான் சொல்லிக்கொள்ள வேண்டும். அவன் எந்நாளும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை.

ஆனால் இனி அதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டாக இராது என்று தெரிந்துவிட்டது. என் பதற்றங்கள் முற்றிலுமாக என்னைவிட்டு நீங்கிவிட்டிருந்தன. என் ரௌத்திரம் எத்தனைக் கொடுங்கனலாக உள்ளிருந்து என்னைச் சிதைத்துக்கொண்டிருந்தது என்பது மெல்ல மெல்ல இப்போது விளங்கத் தொடங்கியிருந்தது. ஒரு விதத்தில் நான் சர்சுதியைப் போலவேதான் வாழ்ந்திருக்கிறேன். அதே உக்கிரம். அதே ஆவேசம். அதே வேகம். அதே ஆர்ப்பரிப்பு. அதன் குளிர்ச்சியை உணர்ந்த யாருக்கும் அடியாழத்தில் அது தேக்கி வைத்திருக்கும் அக்னியைத் தெரியாது. அது எனக்கு மட்டுமே தெரியும். அஹிபுதன்யனிடம் வரம் பெற்று சர்சுதியை மட்டுமே என் உணவாக்கிக்கொண்ட பின்பு உணர முடிந்த அற்புதம் அது.

நதி என்பது அதன் மேற்பரப்பல்ல. நதி என்பது அதன் ஆழமுமல்ல. நதி என்பது உண்மையில் அதன் ஆழத்துக்குள் புதைந்திருக்கும் அக்னி. இது புரிந்த கணத்தில் சடாரென்று எனக்கு இன்னோர் உண்மை புலப்பட்டது. நதியின் ஆழத்தில் அக்னி உள்ளதென்றால், அக்னியின் ஆழத்துக்குள் செல்ல முடிந்தவன் அதன் தண்மையை நிச்சயமாக அறிந்திருப்பான். அதுவும் அங்கே இருக்கத்தான் வேண்டும். விதி என்பது அனைத்துக்கும் பொதுவானதே அல்லவா?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!