95. வந்தவர்கள்
என் உடலற்ற தேகம் சிலிர்க்கிறது. மனமற்ற சிந்தையில் ஒரு பழைய மணம் மெலிதாக நுழைந்து சுழல்கிறது. காரணம் தெரியாமல் உள்வெளியில் எதுவோ ஒன்று குதியாட்டம் போடுகிறது. இது நான் எதிர்பாராத உணர்ச்சி. எதனால் அப்போது அப்படி ஆனதென்று எனக்கு விளங்கவில்லை. வெளியெங்கும் அலைந்து திரிந்து அடங்கித் தணிந்தும் நானறியாத அந்நூதனப் பரவசத்தின் காரணம் எனக்குப் பிடிபடவில்லை. காரணமில்லாமல் மகிழ்ச்சி ஏற்படுமா? காரணமில்லாமல் எதுவுமே இல்லை என்பதுதான் இறந்தபின் நான் பெற்ற தரிசனம். என் இறப்பு உள்பட எல்லாமே, எல்லாமே காரணத்தின்பாற்பட்டதுதான். அதுவல்ல விஷயம். விளைவு வெளிப்படையாகவும் காரணம் பூடகமாகவும் இருப்பது மனிதர்களுக்கு எப்போதும் நடக்கக்கூடியது. அது தெய்வங்களின் கண்ணாமூச்சி விளையாட்டு. நான் தெய்வமாகிவிட்ட கன்னுலா. எனக்கும் அதுதான் என்பது வினோதமாக இருந்தது.
தெய்வங்களுக்குப் பொதுவாகத் தனிப்பட்ட மகிழ்ச்சி என்ற ஒன்று கிடையாது. எந்தக் குலத்தைக் காக்க நியமிக்கப்படுகிறோமோ, அம்மக்களின் மகிழ்ச்சியே எங்களுடையதாக இருக்கும். அவர்களது துயரங்களை நாங்களேதான் அளிக்கிறோம் என்பதால் அது எங்களை அணுகாது. இது இன்னொரு வினோதம். மகிழ்ச்சியும் எங்கள் மூலமாக வழங்கப்படுவதுதான். ஆனால் அதில் பங்குண்டு. துயரத்தில் கிடையாது. தெய்வங்களின் சிந்தையில் துயரச் சுவடுகள் இருப்பது மக்களுக்கு நல்லதல்ல என்பதால் இருக்கலாம்.
பிரச்னை அதுவல்ல. அப்போது நான் உணர்ந்த மகிழ்ச்சி, அடைந்த பரவசத்தின் காரணம் எனக்கு எத்தனை விதமாக யோசித்துப் பார்த்தும் புலப்படவில்லை. கின்னர பூமியில் என் கண்காணிப்புக்கு உட்பட்ட பகுதியெங்கும் சுற்றி வந்தேன். வசிக்கும் ஒவ்வொருவரின் எண்ணத்தினுள்ளும் புகுந்து மீண்டேன். ராஜனின் சபை நிகழ்வுகளைக் கவனித்தேன். அவனது தர்மபத்தினியின் சிந்தையோட்டத்தைக் கண்காணித்தேன். எங்கும் எதிலும் எந்த வித்தியாசமும் புலப்படவில்லை. எல்லாம் அதனதன் தாளகதியில் சரியாக இயங்கிக்கொண்டிருந்தன. முதல் முறை கர்ப்பவதியான சில பெண்களின் மனம் போடும் குதியாட்டத்தைக் கூர்ந்து கவனித்தேன். எனக்கிருந்த பரவசம் அதனை நிகர்த்ததாக இருந்ததை உணர்ந்தேன். ஏன், ஏன் என்று எத்தனை முறை யோசித்தும் விடை கிடைக்கவில்லை.
சட்டென்று என் சகோதரனின் நினைவு எழுந்தது. அவனைக் கண்டு பல காலமாகிவிட்டது. சிந்தையாலும் என்னால் எட்டிப் பிடிக்க இயலாத தொலைவில் எங்கோ இருக்கிறான். அவன் கருதிச் சென்ற பணி முடிந்ததாவென்று தெரியவில்லை. ஏதாவது சிக்கலில் அகப்பட்டுக்கொண்டானா என்று அறியவும் வழியில்லாதிருந்தது. அந்த ரிஷியை அவன் சந்தித்துவிட்டிருப்பானேயானால் நான் கவலைப்பட ஒன்றுமில்லை. ஏனெனில், என்னிடம் அவன் விடைபெற்றுச் சென்ற பிறகு பல்வேறு தருணங்களில் அந்த ரிஷியைக் குறித்துப் பலர் சொன்னதைக் கேட்டுவிட்டேன்.
யாரோ ஒரு ரிஷி. எதிரி இனத்தைச் சேர்ந்தவன். கொல்லப்பட வேண்டியவன் என்று கின்னர ராஜன் முடிவு செய்து, என் சகோதரனுக்கு அந்தப் பணியை விதித்து அனுப்பி வைத்தான். அப்போது நான் அதை ஒரு பொருட்டாகக் கூட நினைக்கவில்லை. வழக்கமான ராஜாங்கப் பணியில் அவன் செல்கிறான் என்பதற்கு அப்பால் எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை.
Add Comment