தூங்காத நகரம் என்று மதுரையைச் சொல்வதுண்டு. பசிக்காத நகரம் என்று சேலம் மாவட்டத்தைத் துணிந்து சொல்லலாம். அந்த அளவுக்கு வகைவகையான உணவுகளுக்குப் பெயர்போனது சேலம் மாவட்டம். இந்த மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான உணவு மிகப்பிரபலம். அந்த வகையில், அம்மாப்பேட்டை பகுதியில் அன்னதாதாவாக இருந்து கொண்டிருப்பது எசென்ஸ்தோசை.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற மாஸ் ஹீரோக்கள் வலம் வந்து கொண்டிருந்தபோது, ஓர் ஓரமாக மோகன் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து நடித்துக் கொண்டிருந்தது போல, கல் தோசை, மசால் தோசை, ரவா தோசை, ஆனியன் தோசை, பொடி தோசை, காளான் தோசைகளுக்கு மத்தியில் கடந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியை இழக்காமல் அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறது எசென்ஸ்தோசை.
பொதுவாகச் சேலம் மற்றும் சுற்றுப்புறங்களின் உணவு அகராதியில் எசென்ஸ் என்பது ஆடு, கோழி போன்ற கால்நடைகளின் இறைச்சியில் செய்யப்படும் குழம்பினை மட்டுமே குறிக்கும். அதாவது இறைச்சியை மசாலாச் சேர்மானங்களோடு வேகவைத்து, வெந்ததும் அதிலிருந்து மாமிசத் துண்டுகளை மட்டும் எடுத்துவிட்டு, மசாலாச் சேர்மானங்களை நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கினால் அதுதான் குழம்பு. அது சற்று தண்ணீர்ப் பதத்தில் இருந்தால் காலை உணவான இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள ஊற்றப்படும். அதுவே சற்று கெட்டியாக, கிரேவி பதத்தில் இருந்தால் மதிய உணவான சாதத்திற்குப் பிசைந்துகொள்ளப் பயன்படும்.
Add Comment