vii. ஜப்பான்
தன்னுடைய மண்ணின் மணம் வீசும் அதிகமான சண்டைக்கலைகளைத் தன்னுள்ளே கொண்ட நாடு என ஜப்பானைச் சொல்லலாம். சீனாவின் குங்ஃபூ ஒன்றிலிருந்து பலவாகப் பிரிந்ததைப் போலவே, ஜப்பானிலும் ஒரு சண்டைக்கலையிலிருந்து மற்றொன்று, அதிலிருந்து இன்னொன்று எனப் பிரிந்தன. ஒவ்வொன்றும் மெருகேறிச் சென்றன. காப்பதைத் தொழிலாகக்கொண்ட சாமுராய்களும், தாக்குவதைத் தொழிலாகக் கொண்ட நிஞ்சாக்களும் சேர்ந்து அந்தக் காலத்தில் ஜப்பானிய சண்டைக்கலையை வளர்த்தனர். நவீன காலத்தில் ஜப்பானிய அரசு அவற்றை விளையாட்டாக அங்கீகரித்து வளர்த்தது.
சீன – ஜப்பானிய உறவு இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. சீன – ஜப்பானியப் போர்களின் வரலாறு ஆயிரத்து முந்நூறு ஆண்டுகள் பழமையானது. உறவும் போருமாக இருந்த சீனாவும் ஜப்பானும் தங்கள் மொழியின் வரிவடித்தை ஒன்றுபோலவே அமைத்துக்கொண்டன. சீன மொழியின் வரிவடிவம் ஹான்சியிலிருந்து ஜப்பானிய வரிவடிவம் காஞ்சி உருவானது. மொழியில் மட்டுமன்றி சண்டைக்கலைகளையும் சீனாவும் ஜப்பானும் ஒன்றுபோலவே அமைத்துக்கொண்டன.
ஜப்பானிய சண்டைக்கலையில் பழமையானது நகினாட்டாஜுட்சு. சிலம்பத்தின் நுனியில் வாளைக் கட்டிய ஆயுதம் நகினாட்டா. ஜுட்சு என்றால் வித்தை, நகினாட்டாஜுட்சு – ஈட்டி வித்தை. தனியாக மோதும்போது வாளின் துணையுடன் மோதிய சாமுராய் வீரர்களுக்குக் கூட்டத்தை எதிர்கொள்ள நீண்ட ஆயுதம் தேவைப்பட்டது. ஈட்டி நீண்ட ஆயுதம்தான், இருப்பினும் ஈட்டிகள் குத்துவதற்கு மட்டுமே ஏதுவானவை. ஈட்டியில் கூர்முனைக்குப் பதிலாக வாள் இருந்தால் அது வெட்டவும் குத்தவும் ஏதுவாக இருக்கும். அந்த அடிப்படையில் உருவானது இந்த ஆயுதம். நகினாட்டா ஒரு போர் ஆயுதம்.
Add Comment