சாதாரணமாக இருப்பதற்கும், எளிமையாக இருப்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. எளிமை என்பது இடம், பொருள், ஏவலைப் பொறுத்து ஆங்காங்கே மாறுதலுக்கு உட்படுகிறது. ஆலயங்கள் என்று எடுத்துக்கொண்டால், வானளாவிய கோபுரங்கள், பெரிய,பெரிய மூர்த்திகள், அழகிய சிற்பங்கள், ஏக்கர் கணக்கில் நிலங்கள், பெரிய தெப்பக்குளம், ஆடம்பரங்கள் இவைகள் எதுவும் இல்லாமல் இருந்தால், கோயில் ரொம்ப சிம்பிளாக இருக்கிறது என்பார்கள். கோயில் சிம்பிளாக இருக்கலாம்.ஆனால், அந்த கோயிலுக்குள் இருக்கும் சக்தி ஆற்றல்மிக்கதாக, வலிமையான ஒன்றாக இருப்பது மிகச்சிறப்பு.
அப்படித்தான் மிகமிக எளிமையாக, ஆனால் மிகப்பெரிய சித்தர் ஒருவரின் அளப்பரிய ஆற்றலைத் தன்னுள் அடக்கியதாக இருக்கிறது சரபங்க முனிவர் ஜீவசமாதி அமைந்துள்ள அருள்மிகு அபிதகுஜாம்பாள் சமேத வசந்தீஸ்வரர் திருக்கோயில். இந்தக் கோயில் சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், கோட்டை என்ற பகுதியில், தாரமங்கலம் செல்லும் வழியில் சற்று உட்புறமாக உள்ளது. சேலம் மாவட்டத்தில் இருந்து ஓமலூர் வரை சுமார்15 கிலோமீட்டர் தூரத்திலும், ஓமலூரில் இருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்திலும் இந்தக் கோயில் அமைந்துள்ளது. சேலத்தில் இருந்து தாரமங்கலம், மேட்டூர் செல்லும் பஸ்சில் ஏறினால் மேச்சேரி பிரிவு ரோடினை அடைந்து, அங்கே இறங்கினால், சிறிது நடந்துசென்று இந்தக் கோயிலை அடைந்து விடலாம். சங்ககிரி, மேட்டூரில் இருந்து வந்தாலும், மேச்சேரி பிரிவு ரோடு என்பதை லேண்ட்மார்க் ஆகக்கொண்டு இங்கு வந்துவிடலாம். இரயில் மார்க்கமாக வந்தாலும், ஓமலூர் இரயில் நிலையத்தில் இறங்கி நடந்து வரும் தூரத்தில்தான் இந்தக்கோயில் உள்ளது.
Add Comment