காரைப் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு இறங்கும்போது கன்னங்கள் லேசாக வலிப்பது போலிருந்தது. எவ்வளவு முயன்றும் என்னால் வெட்கத்தையும் புன்னகையையும் மறைக்க இயலவில்லை. அநேகமாகக் கல்யாண மண்டபத்தில் இருந்து வீடு வந்து சேரும்வரை புன்னகையுடனே இருந்திருக்கிறேன் போல. மேலே போனால் மனைவியும் மகளும் பார்த்தவுடன் கண்டுபிடித்து விசாரிப்பார்கள். மகனுக்கு அவ்வளவு திறமை கிடையாது. கிளம்பும் போதே மகள், “மீசையை ஷேவ் செய்து கொண்டு போனால்தான் அடையாளம் தெரியுமா? 96 படம் மாதிரி ப்ளாஷ்பேக் இருக்குன்னுதான் அம்மாவ விட்டுட்டுப் போறியா?” என்றெல்லாம் கேலி செய்து கொண்டிருந்தாள். “உன் அப்பாவுக்கு நான் கிடைத்ததே அதிகம். இந்த ரோபாேவுக்குக் காதல் கதை, ப்ளாஷ்பேக் எல்லாம் இருக்க வாய்ப்பில்லை ராஜா” என்று என் மூக்கை உடைத்தாள் மனைவி. அவள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. வீட்டிலிருந்து ஆபீஸ். ஆபீஸில் இருந்து வீடு. இதுவே என் வாழ்க்கை. வீட்டில் இருக்கும்போதே சமயங்களில் அலுவலக வேலைகளைப் பார்த்துக் கொண்டிருப்பேன்.
அந்த உழைப்புக்கு, வசதியான வாழ்க்கை பலனாகக் கிடைத்தது. ‘எந்நேரமும் வேலையைக் கட்டிக் கொண்டு அழுவதற்கு எதற்கு என்னைக் கல்யாணம் செய்தாய்?’ என ஆரம்பத்தில் சலித்துக் கொண்டாள் மனைவி. பின்னர் அதுவே பழகிப்போய் விட்டிருக்கும். வேலை செய்து சம்பாதித்துத் தருவதைத் தவிர குடும்பப் பொறுப்பில் நான் பங்கெடுப்பதில்லை. என்னைக் குறைகூற நேரம் இல்லாத அளவுக்கு அவளுக்குக் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் வேலை கிடைத்துவிட்டது. அதிலும் கோவிட் கால ஒர்க் ஃப்ரம் ஹோம் கலாச்சாரத்தில் வீட்டில் இருந்தாலும் கூட அலுவலக அறையில்தான் எப்போதும். சாப்பிடவும் தூங்கவும் மட்டும்தான் வெளியில் வருவேன். மனைவி சொல்வதைப்போல ரோபாவாகவே மாறிவிட்டேன். ஆனால் பொறுப்பறியாத பள்ளிக்கால வாழ்க்கை வேறு மாதிரிதான் இருந்தது. அப்போதும் காதல் கதைகள் எதுவும் இல்லை. ஒரு காதல் கூட இல்லாத வாழ்க்கை அமைந்ததே என்று இளவயதில் நினைத்ததுண்டு. என் மனைவியின் அறிவுக்கும் அழகுக்கும் என்னைச் சகித்துக் கொண்டிருப்பதே என் மேல் இருக்கும் காதலால்தான் என என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்வேன். இன்றைய மாலை அனுபவம் அதற்கு நோ்மாறான கிளுகிளுப்பை என் வாழ்வில் சேர்த்துவிட்டது.
best ending