குறையொன்றும் இல்லை
1981ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நாள். சனிக்கிழமை இரவு. “இனிமேல் உனக்கு இங்கு வேலை இல்லை. பத்து மில்லியன் டாலர்கள் உன்னுடைய பங்காகக் கிடைக்கும்”. சாலமன் பிரதர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜான் கட்ஃப்ரெண்ட் மைக்கேல் புளூம்பர்க்கிடம் அவருடைய அலுவலக அறையில் வைத்து இப்படிச் சொன்னார்.
தினமும் பன்னிரண்டு மணி நேரம் வாரத்தில் ஆறு நாட்கள் எனப் படித்து முடித்ததிலிருந்து பதினைந்தாண்டுகள் இந்த நிறுவனத்தில் தான் வேலை செய்திருக்கிறார். இதை விட்டால் வேறு வேலை எதுவும் தெரியாது. இத்தனைக்கும் மைக்கேல் புளூம்பர்க் அப்போது அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராக இருந்தார். விஷயம் இது தான். சாலமன் பிரதர்ஸ் நிறுவனத்தை பிப்ரோ எனும் நிறுவனத்துக்கு விற்கப்போவதாக முடிவெடுத்து விட்டார்கள். சாலமன் நிறுவனத்தின் அறுபத்து மூன்று பங்குதாரர்களில் பெரும்பாலானோர் புதிய நிறுவனத்தில் பணியாளர்களாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். மைக்கேல் புளூம்பர்க் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
ஹார்வர்டில் முதுநிலை வணிக நிர்வாகம் படித்து முடித்திருந்த மைக்கேல் புளூம்பர்க்கை வேலைக்குச் சேர்த்தவரும் அவருக்கு வழிகாட்டியாக இருந்தவரும் இதே ஜான் தான். மைக்கேலுக்கு திருமணமாகி அப்போது ஐந்து வருடங்கள் ஆகியிருந்தன. கையில் பத்து மில்லியன் டாலர்கள் இருந்தது மட்டும் தான் ஒரே ஆறுதல். மிகச் சரியாக இரண்டு மாதங்கள். அக்டோபர் மாதம் முதல் நாள் புளூம்பர்க் நிறுவனம் உருவானது. அதற்குப்பின் நிகழ்ந்ததெல்லாம் வரலாறு.
Add Comment