தானுண்டு தன் பாடுண்டு என்று யாருக்கும் தொந்தரவில்லாமல் இருக்கும் நாடு ஜப்பான். பிராந்தியத்திலாயினும் சரி, உலகப் பொது விவகாரங்களிலும் சரி, அந்த நாடு அநாவசியமாகத் தலையிட்டதாகச் சரித்திரம் இல்லை. இருந்தும் இடைக்கிடையே உலகத் தலைப்புச் செய்திகளில் வந்து அமர்ந்து விட்டுப் போவதற்கு ஏதாவது அங்கே நடைபெறாமலும் இல்லை. இந்த முறை ‘தசையுண்ணும் உயிர்க்கொல்லி பாக்டீரியா’ என்ற மகுடத்தில் டோக்கியோ சர்வதேசக் கவனத்தைப் பெற்றிருக்கிறது.
உடலுக்குத் தொற்றி நாற்பத்தியெட்டு மணித் தியாலங்களுக்குள் உயிரைக் கபளீகரம் செய்யும் பயங்கர நோயொன்று அங்கே வேகமாகப் பரவி வருவதாக அனைத்துப் பிரதான ஊடகங்களும் ஜப்பானைப் பற்றி அலறுகின்றன. சீனா உற்பத்தி செய்து பகிர்ந்தளித்த கொரோனாவையே இன்னும் மறவாத இப்பூவுலகம், தசையைக் கரைக்கும் நுண்ணுயிரைத் தாங்குமா! ஹாலிவுட் படங்களின் கற்பனைக் கதைகளையே மிஞ்சும் அளவு உக்கிரமான ஒரு உயிரியாக சித்தரிக்கப்படும் இந்த பாக்டீரியா எப்படி ஜப்பானுக்குள் வந்தது என்பதுதான் இங்கே பலருக்கும் புரியாத புதிர்.
கொவிட் இல்லாத காலத்திலும் முகத்திரை அணிந்து சுத்தம் பேணும் மக்கள். துளியளவும் அழுக்கில்லாத நகரங்கள். சமூக இடைவெளி பேணுவதில் தங்கப் பதக்கம் பெற்ற சிஸ்டம். நோயோ, பூகம்பமோ, அணுகுண்டோ, எதனையும் நிர்வாகம் செய்யும் செயல்திறன் மிக்க அரசு. நீண்ட ஆயுளுக்குப் புகழ்பெற்ற உடல்கள். இவையனைத்தையும் மீறி, ஒரு நோய்க்கிருமி அங்கே வெற்றிநடை போடுகிறதா? கொஞ்சம் அலசிவிட்டு வருவோம்.
‘ஸ்ரெப்டோ கொக்கஸ் ஷாக் சின்ட்ரோம்’ (STSS) எனும் நோயை ஏற்படுத்தும் இந்த நுண்ணுயிர், க்ரூப் ஏ வகையை சேர்ந்தது. உடலின் ஏதாவது ஒரு பகுதியில் சின்னதாக ஒரு ஓட்டை கிடைத்தால், தயக்கமின்றி நுழைந்து கொள்ளக் கூடியது. கால் வைத்த கணம் முதல் அந்தப் பகுதியில் ஆசுவாசமாக அமர்ந்து, தனது பெட்டி படுக்கைகளை அவிழ்க்கத் தொடங்கிவிடும். பசிக்கும் போது, மெல்லிய உடல் இழையங்களைப் புசித்துக் கொள்ளும். அப்படியே குழந்தை குட்டியென்று பெருகி, மெதுவாக அடுத்த உடல் பாகங்களை நோக்கிப் புலம் பெயரும்.
Add Comment