ஹமாஸை ஒழித்து பணயக் கைதிகளை மீட்கப் போரை ஆரம்பித்தது இஸ்ரேல். இரு இலக்கு. ஒர் ஆண்டு. 40000க்கும் மேற்பட்ட அப்பாவிகளை கொன்று குவித்த பிறகும் இலக்கை அடையவில்லை. அதனாலென்ன புதிய இலக்குடன் லெபனான், ஈரான் பக்கம் போகலாம். நம்மை யார் கேட்கப் போகிறார்கள் என்கிற நினைப்பில் படுகொலைகளைத் தொடர்கிறது இஸ்ரேல். அனைத்துலக அமைப்புகள் கண்டனம் தெரிவிப்பதுடன் தம் கடமை முடிந்ததென இருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் இருந்தே பணயக் கைதிகளை மீட்பதில் இஸ்ரேல் ஆர்வம் காட்டவில்லை. அது ஒரு காரணம் மட்டுமே. பாலஸ்தீனியர்களைக் கொன்று குவிக்கக் காரணம் எதுவும் இஸ்ரேலுக்குத் தேவையில்லை. அவர்கள் வாழத் தகுதியில்லாத விலங்குகள் என்பதே இஸ்ரேலின் கொள்கை. “இஸ்ரேல் தங்களைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது” என அமெரிக்காவும் மற்ற நட்பு நாடுகளும் திரும்பத் திரும்பச் சொல்வதற்குக் காரணமாக அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலும் பணயக் கைதிகள் சிறைபிடிப்பும் இருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் நூற்றுக்கு மேல் கண்டன அறிக்கைகளைக் கொடுத்துவிட்டது. இனஅழிப்பு என்றே சொல்லிவிட்டது. ஆனால் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு துரும்பையும் நகர்த்த முடியவில்லை. இதனால் எல்லாம் அமைதி திரும்பிவிடுமா? ஹமாஸ் தலைவர்களை அழித்துவிட்டால் வன்முறை நின்றுவிடுமா? திங்கள்கிழமை வடக்கு இஸ்ரேல் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு காவலர் கொல்லப்பட்டார். பத்து இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர். கடந்த வாரம் டெல் அவிவ் நகரில் நடந்த சம்பவத்தில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் திறன் அதிகம் என்பதால் காஸாவில் நாள்தோறும் இதை விட எண்ணிக்கையில் மக்களைக் கொல்கிறது. மருத்துவமனைகள், பள்ளிகள்தான் முதன்மையான இலக்கு.
Add Comment