ஈத் மீலாத் மஜீத்!
சிரியாவில் கூறப்படும் கிறிஸ்துமஸ் வாழ்த்து. மின் விளக்குகளாலான கிறிஸ்துமஸ் மரத்தின் உச்சியை அலங்கரிக்கிறது ஒரு நட்சத்திரம். கிறிஸ்துமஸ் மணிகளின் வடிவில் மின்னலங்காரத்துடன் நுழைவு வாயில்கள். சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் கிறிஸ்துமஸைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. தெருக்களில் ஆங்காங்கே சாண்டா கிளாஸ் உடையணிந்தவர்கள் தொப்பையுடன் நடனமாடி, குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சாக்லேட்டுகளை வழங்குகின்றனர். தெருக்களில் கிறிஸ்துமஸ் பாடல்கள், கடைகளில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களோடு விருந்து என்று அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த கிறிஸ்தவர்களும் ஒற்றுமையாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
என்ன… சுன்னி முஸ்லீம் மக்கள் அதிகமுள்ள மத்திய கிழக்கின் சிரியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறதா? ஆம். இஸ்ரேல், பாலஸ்தீனில் தொடங்கி ஜோர்டான், லெபனானிலும் கூட கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. சிரியப் புரட்சிக்கு முன்னர் சிரியாவில் பத்து சதவீதமிருந்த கிறிஸ்தவர்கள் இப்போது, இரண்டு சதவீதமாகி விட்டனர். பாதுகாப்புக் கருதி இடம்பெயர்ந்து விட்டனர். இருந்தும் அதிபர் அசாத்தின் ஆட்சி முடிவுக்கு வந்ததில் தொடங்கிய கொண்டாட்டம், கிறிஸ்துமஸை சாக்காக வைத்து இன்னும் நீண்டுகொண்டிருக்கிறது.
“சொல்லப்போனால், சிரியக் கைதிகளின் குடும்பத்தினருக்கு நாங்கள் ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். இருப்பினும் அவற்றை மறந்து, புதியதொரு வாழ்விற்கான நம்பிக்கையை வளர்க்கவே முயன்று வருகிறோம். இந்தக் கொண்டாட்டங்கள் வழியே எங்களை உற்சாகப்படுத்திக் கொள்கிறோம். இத்தனை வருடங்கள் கண்டிராத சிரிப்பையும், நம்பிக்கையையும் என் மக்களிடையே இப்போது காண்கிறேன்.” என்கிறார் நாற்பத்திரண்டு வயதாகும் ராவத் டீயாப். தலைநகரில் கைவினைப் பொருள்களை விற்கிறவர்.
Add Comment