2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய தஹாவுர் ராணாவை அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பாக நாடு கடத்தியுள்ளனர் இந்திய அதிகாரிகள். ஆறு ஆண்டுகளாக இந்தியா நடத்திய சட்டப் போராட்டம் இறுதியில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து ராணாவைக் காப்பாற்றி நாடு கடத்துவது இந்திய அதிகாரிகளுக்குப் பெரும் சவாலாக இருந்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறையும் தேசியப் புலனாய்வு முகாமையும் (என்ஐஏ) தேசியப் பாதுகாப்புப் படையுடன் இணைந்து இதற்காக ‘ஆபரேஷன் ராணா’ என்ற திட்டத்தை உருவாக்கியிருந்தனர்.
கடந்த வாரம் செவ்வாய்கிழமை மாலை அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் இருந்த ராணாவை அந்நாட்டு அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மறுநாள் காலை என்ஐஏ அதிகாரிகள், என்எஸ்ஜி வீரர்கள் அடங்கிய குழு ராணாவுடன் தனி விமானத்தில் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து புறப்பட்டனர். அந்த விமானத்தின் விவரங்கள், பயண வழித்தடம், தரையிறங்கும் இடம், நேரம் என அனைத்துத் தகவல்களும் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டன. விமானத்தின் நேரலைக் கண்காணிப்புத் (Live Tracking) தகவல்கள் விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மட்டும் அறியும் வகையில் அமைக்கப்பட்டன. விமானம் புலனாய்வு அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பில் இருந்தது. எரிபொருள் நிரப்ப விமானம் தரையிறங்கிய இடம் கூட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தவிர யாருக்கும் தெரியாது. தகவல்கள் அந்த அளவுக்கு ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டன. பயணத்தில் தற்கொலை முயற்சி மேற்கொள்வதைத் தடுக்க ராணாவின் கைகள் என்ஐஏ அதிகாரி ஒருவருடைய கையுடன் சேர்த்து விலங்கிடப்பட்டது.
வியாழக்கிழமை பிற்பகல் டெல்லி பாலம் விமான நிலையத்தில் ராணாவை அழைத்து வந்த விமானம் தரையிறங்கியது. அலைபேசி உள்பட அனைத்து உபகரணங்களையும் சமர்ப்பிக்கப்பட்டபின் அதிகாரிகள் ராணாவைக் கைது செய்யவும் பாதுகாப்புப் பணிகளுக்காகவும் அங்கே காத்திருந்தனர். விமானத்திலிருந்து இறங்கிய ராணாவை என்ஐஏ அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகக் கைது செய்தனர். பாலம் விமானப் படைத்தளத்தில் இருந்து, உள்ளே இருப்பவர்களின் முகம் தெரியாதவாறு வடிவமைக்கப்பட்ட, குண்டு துளைக்காத வாகனத்தில் கைது செய்யப்பட்ட ராணாவை அழைத்துச் சென்றனர். விமான நிலையத்திலிருந்து நேராக பாட்டியாலா நீதிமன்றத்திற்கு ராணாவைக் கொண்டு சென்றனர். சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு பதினெட்டு நாள்கள் என்ஐஏ காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Add Comment