04 – வெண்மையிலும் சிவந்த சோவியத் ரஷ்யா
“அன்புள்ள லெனின் தாத்தாவிற்கு,
நாங்கள் சமர்த்து மாணவர்களாகி விட்டோம். நன்றாகப் படிக்கிறோம், பிழையில்லாமல் எழுதுகிறோம். அழகான கலைப்பொருட்களைச் செய்கிறோம். முக்கியமாக தினமும் காலை குளிக்கிறோம். சாப்பிடும்முன் கைகளைக் கழுவுகிறோம். உங்களையும், எங்கள் ஆசிரியரையும் மகிழ்விக்க விரும்பியே இதையெல்லாம் செய்கிறோம். அழுக்காக இருந்தால், உங்களுக்கு எங்களைப் பிடிக்காதே!”
ரஷ்யாவின் கிராமப்புறப் பள்ளி ஒன்றிலிருந்து வந்த இந்தக் கடிதம் அதிபர் லெனினைப் பெருமிதப்பட வைத்தது. “பார்த்தீர்களா, நாம் ஒட்டுமொத்தமாக அனைத்திலும் முன்னேறுகிறோம். தினமும் குளிக்கும் கலாசாரத்தைப் பழகியிருக்கும் இந்தக் குழந்தைகள்தான், சோவியத்தைக் கட்டியெழுப்புகிறார்கள். இனி, வெற்றியைப் பற்றிய சந்தேகமே வேண்டாம்.” என்று தீர்க்கமாகக் கூறுகிறார் லெனின்.
சுகாதாரம் -சோவியத்தின் உருமாற்றத்திற்கு லெனின் கையிலெடுத்த ஆயுதம். எல்லாவற்றிலும் சோவியத் ரஷ்யா சிறந்து விளங்க வேண்டும். சமுதாய ஒழுங்கிருந்தால் தான் இந்நிலையை அடைய முடியும். உடல், மனது, சுற்றுப்புறம் என அனைத்தும் தூய்மையாக, அதாவது வெண்மையாக இருக்க வேண்டும். மேற்குலகைப் போல முன்னேற நினைப்போருக்கு, முதலில் பதிவது அவர்களின் வெண்மைதான். இந்தக் கனவுலகை உருவாக்கும் முதற்படிதான், தினக்குளியலும், சோப்பு போட்டுக் கை கழுவுதலும். ஒருவகையில், சோவியத்தின் இரத்தக் கறைகளையும் சேர்த்தே கழுவியது இந்தத் தூய்மை!
Add Comment