விண்ணை நோக்கிய பயணம்
அதிரடியாக இருந்தன குருஷவின் சீர்திருத்தங்கள்.
அவரது வேளாண்மைத்துறை அனுபவங்களைக் கொண்டு உருவானது ‘கன்னி நிலங்கள்’ திட்டம். மத்திய ஆசியாவின் ஸ்டெப்பி புல்வெளியில், தானியம் பயிரிடும் கொள்கை. அதுவரை பயிரிடப்பட்டிராத, கன்னி நிலங்களவை. சீரான மழைப்பொழிவு இல்லாத பிராந்தியம். இத்திட்டங்களை கஜகஸ்தான் பகுதிகளில் சோதிக்க, கட்சிக்காரர்களை அங்கு குடியேற்றினார். இதை விரும்பாத கஜகஸ்தான் மாகாணத் தலைவர் அப்புறப்படுத்தப்பட்டார். தனக்கு ஆதரவான ப்ரெஷ்நேவ்வை அதிகாரப் பொறுப்பில் அமர்த்தினார். விளைச்சலை அதிகரிக்க, இப்படியான முயற்சிகள் தேவைப்பட்டன.
வேளாண்மையில் சோவியத் தன்னிறைவு அடையும் இலக்கிற்கான பயணமிது. அடுத்த நான்கே ஆண்டுகளில், அமெரிக்காவின் பால், இறைச்சி, வெண்ணெய் உற்பத்தியளவை சோவியத்தும் அடைய வேண்டுமே! நெடுங்காலக் கனவுகளை, குறுகியகால இலக்குகளாக நிர்ணயித்தார் குருஷவ். செயல்படுத்த போதியப் பொருளாதாரமும், வளங்களும் இருக்கவில்லை. சோதனை முறை செயல்பாடுகள், நாட்டின் வளத்தை வீணடித்தன. இருந்தும் முயன்றனர் சோவியத் மக்கள். முயற்சிக்குப் பலன் கிட்டாமல் போகவில்லை. நெருக்கடியில் தானே வெளிப்படும் ஒளிந்திருக்கும் திறமைகள்!
Add Comment