மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சென்ட்ரல் திரையரங்கத்தின் டிக்கெட் கிழிக்கும் பெரியவர் அந்தச் சிறுவனைப் பார்த்ததும், “இன்னிக்குமாடா?” என்று கேட்பார். “எங்க தலைவர் படம் நான் பாக்காம யார் பாப்பா?” என்றவாறு உள்ளே சென்ற அவன் அறுபதாவது நாளாகத் தொடர்ந்து பார்த்த திரைப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை.’
மதுரை மேல ஆவணி வீதியில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையின் மாடியில் ஒரு பெரிய ஹால். அந்த வீதியில் ஐந்து கார்கள் அணிவகுத்து நின்றால் மேலே மாடியில் கொண்டாட்டம் நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். அம்சவல்லி பிரியாணி, அம்மா மெஸ் அயிரை மீன் குழம்பு, குமார் மெஸ் நெய் மீன், லட்சுமி விலாஸ் ஹல்வா, ஜிகர்தண்டா போன்றவை சீரான இடைவெளியில் அணிவகுத்துச் செல்லும். இதற்குள் அந்தச் சிறுவன் திரையுலகில் ஒரு நல்ல இடத்திற்கு வந்திருந்தான். ஆனாலும் அவன் தனது மதுரை நண்பர்களை மறக்கவில்லை. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தனது நெருக்கமான திரையுலக நண்பர்கள் புடை சூழ இங்கு வந்துவிடுவது வழக்கம். காலையில் ஆரம்பிக்கும் கொண்டாட்டம் இரவுவரை நீளும். அங்கு வந்துவிட்டால் தான் ஒரு பிரபலம் என்பதையே யாரும் உணராதபடி செய்து விடுவது அவர் வழக்கம்.
Add Comment