8. பற்றி எரியும் நிலம்
அந்த இடத்தின் பெயர் ஸூமி (Sumy). உக்ரைனின் வட கிழக்கு எல்லையோர மாகாணத்தின் தலைநகரம். மாகாணத்தின் பெயரும் ஸூமிதான். பெரிய நகரம். ஓரளவு வசதியான நகரமும்கூட. நூற்று நாற்பத்தைந்து சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு அதிகபட்சம் இரண்டரை லட்சம் ஜனத்தொகைதான் என்றால் புரியும் அல்லவா? நீர் வரத்து குன்றாத ஸெல் நதி பாய்கிற பிரதேசம் என்பதால் விளைச்சல் பிரமாதமாக இருக்கும். உலக கோதுமை உற்பத்தியில் பத்து சதமானம் உக்ரைனில் இருந்து கிடைப்பதுதான் என்றொரு கணக்கு இருக்கிறது. கோதுமை தவிரவும் பல தானியங்கள் இங்கே விளைகின்றன. அந்த ஏற்றுமதி வருமானம் ஒன்றுதான் உக்ரைனை இன்று வரை வாழவைத்துக்கொண்டிருப்பது. அதில் ஸ்டாலின் எப்படி மண்ணை அள்ளிப் போட்டார் என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். புதின் எப்படி அதையே இன்னும் நவீனமாக்கிச் செய்கிறார் என்று இப்போது பார்க்கலாம்.
ஸூமி. அங்கேதான் தொடங்கினோம் இல்லையா? இருக்கட்டும். ஒப்பீட்டளவில் இதைவிட அதிக விளைச்சல் தருகிற பிராந்தியங்கள் உக்ரைனில் அதிகம். குளிர் காலத்தில் (ஜனவரி) ஸூமியில் மைனஸ் ஆறு டிகிரி வரை போகும். வெயில் உச்சம் என்றால் இருபது டிகிரி. இந்தக் காலநிலைக்கு எவ்வளவு விளையுமோ அவ்வளவு விளையும். ஆனால் இங்கே விவசாயத்தினும் ரசாயனத் தொழிற்சாலைகளே அதிகம்.
போர் தொடங்கிய சூட்டிலேயே (மார்ச் இரண்டாம் வாரம்) ரஷ்யத் துருப்புகள் ஸூமியைத் தின்னத் தொடங்கிவிட்டன என்பதை செய்தித் தாள்களில் பார்த்திருப்பீர்கள். எல்லைப் புற நகரம் என்பதால் எளிய இலக்கு. அதுவல்ல விஷயம். ஸூமியின் பொருளாதார மையமே ரசாயனத் தொழிற்சாலைகள்தாம் என்பது ரஷ்யாவுக்குத் தெரியும். ஆனால் அவற்றின் மீது அவர்கள் கையே வைக்கவில்லை.
Add Comment