34 சி.வை.தாமோதரம் பிள்ளை (12.09.1832 – 01.01.1901)
ஈழத்துத் தமிழறிஞர்கள் என்று சொல்லும் போது உடனே நினைவில் தோன்றக்கூடியவர்களுள் ஒருவர் பதிப்புச் செம்மல் சி.வை. தாமோதரம் பிள்ளை. ஈழத்தின் உ.வே.சா. என்றும் அவரைச் சொல்வார்கள். உ.வே.சா. செய்ததை, உ.வே.சா’வுக்கும் முன்பு இருந்து செய்தவர் இவர். சுவடிகள் தேடி இவர் அலைந்து திரிந்து செய்த பதிப்புப் பணிகள் அத்தனை சிலாக்கியமானவை. கல்விக்காகவும், வேலைக்காகவும் கிருத்துவ மதத்திற்கு மாறும் வழக்கம் அந்நாட்களில் இருந்தது. கிருத்தவ மதத்திற்கு மாறிக் கல்வி கற்றார். பின்னர் ஆறுமுக நாவலரின் தொடர்பு கிடைத்தது; அவரது பொழிவுகளைக் கேட்டு மனம் நெகிழ்கிறார். சிவ சமயியாகப் பிறந்து, கிருத்துவ மதத்திற்கு மாறி, மீண்டும் சைவ சமயத்திற்கே திரும்பியவர்.
தாம பதிப்பித்த நூல்களின் செம்மைக்காக கடும் உழைப்பைக் கோரிய சுவடிகளின் ஒப்பு நோக்கல், பாட பேதங்களைச் சரி பார்த்தல், அதில் ஐயம் ஏற்பட்டால் தக்க தமிழறிஞர்களிடம் ஆலோசித்தல் என்று இடையறாது இயங்கியவர். தமது பதிப்புகளில் செம்மையான பதிப்புரைகளை அளித்த வழக்கத்தை ஏற்படுத்தியவர். மிகச்சிறப்பு வாய்ந்த அந்தப் பதிப்புரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு ‘தாமோதரம்’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.
Add Comment