கோபாலகிருட்டிண பாரதி ( 1810 – 1896 )
தமிழானது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் ஆக முத்தமிழ் என்று வகைப்படுத்தப்படும். இவற்றுள் இசைத்தமிழுக்கும் நாடகத்தமிழுக்கும் முதல் நூல்களாக சிலப்பதிகாரம் தொட்டுப் பல நூல்கள் உள்ளன. எனினும் 17’ம் நூற்றாண்டிலிருந்து, 19’ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தென்னிந்தியாவில், இசையில் தெலுங்கு மொழி பரவலாக ஏற்றம் பெற்றது. தமிழிசையைத் துலக்கம் பெறச்செய்யப் பல ஆன்றோர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றினார்கள். தமிழிசைக்கு என ஒரு இயக்கமே பின்னர் தோன்றியது. பெரும் புரவலர்கள் பொருள் வழியும், புலவர்கள் கவி வழியும் தமிழிசைக்குப் பெரும் ஆக்கங்களைச் செய்தளித்தார்கள். அந்த ஆக்கங்களில் சில இன்றளவும் மங்காத புகழுடன் விளங்குபவை. தமிழிசைக்கான அரங்கங்களில் ஒரு பாடல் மிகவும் பிரபலமானது. ‘நடனம் ஆடினார், வெகு நாகரீகமாகவே.. கனக சபையில்.. ஆனந்த நடனம் ஆடினார்’ என்ற பாடல். நமது தலைமுறையில் பாடகி சுதா இரகுநாதன், அவருடைய குருவான எம்.எல்.வசந்தகுமாரி போன்றோர் குரலில் இந்தப் பாடல் பாடப்பெறாத தமிழிசை மேடைகளே இல்லை எனலாம். இந்தப் பாடல் உள்பட, இது போன்ற எண்ணற்ற பாடல்களை இயற்றியளித்து, தமிழிசைக்கு பெரும் ஆக்கம் நல்கிய ஒருவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றித் துலங்கி, கிளர்ந்து விளங்கி இன்றளவும் நிறைந்து வாழ்கிறார். அவரே இந்தக் கட்டுரையின் நாயகர் கோபாலகிருட்டிண பாரதியார்.
Add Comment